செய்திகள்

ஜம்மு-–காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Makkal Kural Official

ஸ்ரீநகர், செப். 25–

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு–-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தேர்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகின. இதனைதொடர்ந்து, ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 239 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில் 25 லட்சத்து 78 ஆயிரத்து 99 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு மையங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விடவும், ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதையும் பார்க்க முடிகிறது.வெப்-கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விறுவிறுப்புடன் நடந்து வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் அவரது மகனும் கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லாவும் ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்

பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ராகேஷ் குமார் கட்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தேர்தலையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முதல்முறை வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தீவிரவாதம் அற்ற வளர்ந்த ஜம்மு–-காஷ்மீர் உருவாக மக்கள் பெருமளவில் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுகிறேன்” என அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், செழிப்பு மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் – இந்தியாவுக்கு வாக்களியுங்கள். உங்கள் மாநில அந்தஸ்தை பறித்ததன் மூலம், பாஜக அரசு உங்களை அவமதித்து, உங்கள் அரசியலமைப்பு உரிமைகளுடன் விளையாடியுள்ளது. இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் தீய வட்டத்தை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், புட்காம் தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை 16 வெளிநாட்டு அமைப்புகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் பார்வையிட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இந்த குழுவில் அடங்குவர்.

ஜம்மு–-காஷ்மீர் சட்டசபைக்கு மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *