செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Makkal Kural Official

ஸ்ரீநகர், டிச. 19–

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டரின்போது 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்று தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சினார் கார்ப்ஸ் படைப்பிரிவு சார்பில் சமூக வலைதளத்தில், “இன்று இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் சேர்ந்து குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதனை அறிந்து தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படை தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. 8 முதல் 10 மாவட்டங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 18 பேர் படை வீரர்கள், 14 பேர் பொது மக்கள், 13 பேர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *