ஸ்ரீநகர், மே 13–
ஜம்மு–காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பங்கரவாத தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது.
இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ரியாசியில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதினடையே பதான்கோட் மற்றும் அமிர்தசரசில் கல்வி நிலையங்கள் இன்றும் (செவ்வாய்கிழமை) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தொடர்ந்து பஞ்சாபின் சில மாவட்டங்களில் மூடப்பட்டு இருந்த பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. நேற்று மக்கள் தங்களின் இயல்பு நிலையை நோக்கி திரும்பினர். சந்தைகள் வழக்கம் போல் இயங்கின.
இந் நிலையில் நேற்றிரவு மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இன்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட், பாசில்கா, பெரோஸ்பூர், டர்ன்தரன் ஆகிய நகரங்களில் பள்ளிகள் மூடப்படும். அமிர்தசரஸில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படும். பேராசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எல்லை அருகில் உள்ள மாவட்டங்களில் மின்தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். மக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.