சிறீநகர், செப். 16–
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி நகரில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ படைத் தலைவர் கர்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜர் ஆசிஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஹுமாயூன் பட் ஆகிய 3 அதிகாரிகள் புதன்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
2 பேர் சுட்டுக்கொலை
இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாரமுல்லா காவல்துறையுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்களும் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, உரியின் ஹர்லங்கா பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தேடுதல் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.