செய்திகள்

ஜம்முவில் 62 ஏக்கரில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் திறப்பு

சிறீநகர், ஜூன் 9–

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவின் புறநகர்ப் பகுதியில், 62 ஏக்கரில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழுமலையான் கோயில்களை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஜம்முவின் புறநகரான மஜீன் பகுதியில் ஏழுமலையான் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், ஜம்மு பிராந்தியத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு வெளியே கட்டப்பட்டுள்ள ஆறாவது ஏழுமலையான் கோயில் இதுவாகும்.

2 ஆண்டில் கட்டப்பட்டது

இந்தக் கோயிலை மந்திர முழக்கத்துக்கு இடையே ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். ஷிவாலிக் வனப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறையில் வழிபாடு மேற்கொண்ட பின், கோயிலை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் துணை நிலை ஆளுநரும் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி , “ஜம்மு-காஷ்மீரில் இக்கோயில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தற்போது ஜம்முவில் இருந்தபடி திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரரை வழிபடலாம். மாதா வைஷ்ணவதேவி கோயிலுக்குச் செல்பவர்கள் இங்கு தரிசனம் செய்ய முடியும்’ என்றார்.

புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் அமைந்திருக்கும் ஜம்மு – கத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. ஜம்முவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *