செய்திகள் நாடும் நடப்பும்

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொலை: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி


ஆர். முத்துக்குமார்


ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருந்த தலைவருமான ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 67.

2006–ல் சர்ச்சையுடன் இவரது பிரதமர் பயணம் துவங்கியது. 2012ல் 2வது முறையாகவும் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

கொரோனா பெரும் தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கை நிலை நிறுத்தியபோது நாட்டின் பிரஜைகளுக்கு 1000 டாலர் தர உத்தரவிட்டார். அதை வெற்றிகரமாக அனைவருக்கும் தந்து நல்ல பெயர் சம்பாதித்து மீண்டும் பிரதமராக இது கிட்டத்தட்ட ‘ஓட்டு வாங்க வருஷம்’ என்ற அரசியல் எதிரிகள் விமர்சித்தனர்.

ஆனால் இது தனக்கு அரசியல் ஆதாயத்துக்காக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக 2020லேயே பதவியை ராஜினாமா செய்தார். அது அவரது அரசியல் எதிரிகளுக்கு ஆச்சரியமான அதிர்ச்சியை தந்தது.

2011ல் சுமார் 15 ஆயிரம் பேரின் உயிரை பறித்த சுனாமி உடனான நிலநடுக்கத்தின் போது அரசு பணிகளையும் சேவைகளையும் மீண்டும் புத்துயிர் பெற்று உரிய வகையில் செயல்பட வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

அமெரிக்க ஜனாதிபதிகள், ஆஸ்திரேலிய பிரதமர்கள், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது பிரதமர் மோடி உட்பட பல தலைவர்களின் நட்பை பெற்ற அவர் படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் பட்டியலில் இடம் பெற காரணம் என்ன? பாதுகாப்பு வளையம் மிக எளிமையாக இருக்கக் காரணம் என்ன?

ஜப்பானில் துப்பாக்கி கலாச்சாரம் அறவே கிடையாது. ஒருவர் துப்பாக்கியை வாங்க நினைத்தால் அவரது பின்னணி படு தீவிரமாக ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு தான் உரிமம் வழங்கப்படும். அப்படி இருக்க முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவாகவே இருப்பதில் வியப்பில்லை.

அபேயை கொன்ற குற்றவாளி ஒர் முன்னாள் கடற்படை வீரர் ஆவார். அவரே வீட்டில் இருந்தபடி ஓர் துப்பாக்கியைத் தயாரித்து இருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் சுட்டிக் காட்டுகிறது.

1954ல் பிறந்த அவர் 2020 வரை பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் வரை தொடர்ந்து 8 வருடமும் அதற்கு முன்பும் 2006 ல் ஒரு வருடம் பிரதமராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

இவரது தாத்தா 1957 முதல் 1960 வரை அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். பிறகு தந்தையும் 1982 முதல் 1986 வரை அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்.

இவர் பதவி வகித்த காலத்தில் பிற நாடுகளுடனான நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். வர்த்தக மேம்பாடுகளுக்கும் ராணுவ வலிமையை ஸ்திரமாக மாற்றிட விசேஷ கவனம் செலுத்தியவர் ஆவார்.

உடல்நல கோளாறுகள் என்று சுட்டிக் காட்டியே பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவருக்குப் பிறகு இரு பிரதமர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

ஆனாலும் தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் தனக்கு ஏற்புடைய தன் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கையில் 41 வயது இளைஞனின் துப்பாக்கி சுடுதலுக்கு இறையாகி நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டு அவரது அபிமானிகளை கண்ணீரில் தத்தளிக்க வைத்து விட்டார்.

ஜப்பான் அரசியலில் இது முன்பே நடந்துள்ள கொடூரம் ஆகும். 1990 ல் ஜப்பான் மேயரையே சுட்டுக் கொன்றுள்ளனர். 1994ல் டோக்கியோ ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் பிரதமரை சுட்டுக் கொன்ற வரலாறும் உண்டு.

பிற நாடுகளில் ஒருவர் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்க கடினமான சட்டத்திட்டங்கள் இருக்கும். ஜப்பானில் தான் அது மிக கண்டிப்பாக இருக்கிறது.

விண்ணப்பிப்பவர்கள் துப்பாக்கி சுடுதலில் மிகத் துல்லியமாக கடும் வீரராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர் 90% துல்லியத்துடன் சுடும் வீரராக இருக்க வேண்டும்.

ஆக துப்பாக்கிப் பயிற்சியில் முன்அனுபவம் இல்லாத தலைவர்களால் ஜப்பானில் துப்பாக்கியை வாங்கவே முடியாது.

இப்படிப்பட்ட கடுமையான நிலையிலும் எப்படியோ துப்பாக்கியை வாங்கிவிட்ட ஒரு கொடியவனால் நிகழ்த்தப்பட்ட வேதனை தரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓர் அனுபவசாலி முன்னணி தலைவரை ஜப்பான் இழந்துள்ளது.

ஜப்பான் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. பல தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகள் நம் நாட்டில் இருக்கிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம் ஆகும். ஜப்பானியர்கள் விரும்பும் பல அம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால் பல ஜப்பானிய தொழிற்கூடங்கள் இங்கு இருக்கிறது.

அதை மனதில் கொண்டு ஜப்பானிய தலைவர் அபேயின் மறைவுக்கு தமிழகமும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது.


Leave a Reply

Your email address will not be published.