செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவு: அரைக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடி

ஒப்பற்ற தலைவரான எனது நண்பரை இழந்துவிட்டேன்–பிரதமர் மோடி இரங்கல்

டோக்கியோ, ஜூலை 9–

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றம், செங்கோட்டை, குடியரசுத் தலைவர் மாளிகையில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் ஷின்சோ அபே. 67 வயதான இவர் 2006ல் பிரதமரானார். பின்னர் 2007 பிரதமர் பதவியைக் குடல் நோய் காரணமாக ராஜினாமா செய்தார். எனினும் ஜப்பானின் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்தார்.

2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின்போது மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார் அபே. இவரது பொருளாதாரக் கொள்கைகள் மீண்டும் 2012ல் பிரதமராக்க உதவியது. அதோடு அவரது தலைமை இந்தியாவுடனான ஜப்பானின் உறவை வலுப்படுத்தியது. 2014ல் இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட முதல் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. இந்நிலையில் நாளை நடைபெறும் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபை தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

பேசத் தொடங்கிய அரை மணி நேரத்தில் அவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. மயக்க நிலையில் நாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் செய்தியில், “எனது இனிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மரணத்தால் வார்த்தைகளால் கூற முடியாத அதிர்ச்சியையும், துயரத்தையும் நான் கொண்டுள்ளேன். அவர் உலகளாவிய அரசியல் பிரமுகராக உயர்ந்திருந்தவர், ஒப்பற்ற தலைவர், குறிப்பிடத் தகுந்த நிர்வாகி. ஜப்பானை உலக அளவில் சிறந்த இடத்தில் வைப்பதற்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அபே உடன் நட்பு இருந்தது. குஜராத் முதலமைச்சராக எனது பதவிக்காலத்தில் அவரை நான் அறிந்திருந்தேன். நான் பிரதமரான பிறகும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலக நடவடிக்கைகள் குறித்த அவரின் நுட்பமான கருத்துக்கள் எனக்கு எப்போதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

“அண்மையில் எனது ஜப்பான் பயணத்தின் போது அபேயை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையும், பல விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். இதுவே எங்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. அவரது குடும்பத்திற்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இரங்கல்கள். ஷின்சோ அபேவுக்கு மிகுந்த மரியாதை தெரிவிக்கும் வகையில் ஜூலை 9 அன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அபேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.