செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கத்தில் 24 பேர் பலி: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

டோக்கியோ, ஜன. 2–

புத்தாண்டு தினமான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு உயர் அதிகாரிகள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை எழலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்நிலையில், ஜப்பான் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் சுனாமி எச்சரிக்கையை அரசு வாபஸ் பெற்றது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணாங்களில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.

ஒருவாரத்துக்கு உஷார்

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 129 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவை 2 முதல் 6 ரிக்டர் அளவுகோலாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் மீண்டும் 7 ஷிண்டோ அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

பிரதமர் உறுதி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், “இஷிகாவா மாகாணத்தில் அவசர பேரிடர் மேலாண்மை குழு முழு வீச்சில் செயல்பாட்டில் உள்ளது. அவர்கள் சேதங்களை ஆய்வு செய்வதோடு, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். நேரம் செல்லச் செல்ல நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று தெரிய வந்துள்ளது. இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதே இலக்கு. காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களது நலன் கருதி, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஜப்பானில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகிறோம். உதவி தேவைப்படுவோர் இந்திய தூதரகத்தை அணுகலாம். இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

81-80-3930-1715 (யாகுப் டோப்னோ), 81-70-1492-0049 (அஜய் சேத்தி), 81-80-3214-4734 (பன்வால்), 81-80- 6229-5382 (பட்டாச்சாரியா), 81-80-3214-4722 (விவேக் ரத்தோர்) ஆகிய எண்களில் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். sscons.tokyo@mea.gov.in மற்றும் offfseco.tokyo@mea.gov.in ஆகிய இ–மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *