செய்திகள்

ஜப்பானின் புதிய ஏஐ குளியல் மிஷின்!

Makkal Kural Official

டோக்கியோ, டிச. 28–

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், ஜப்பான் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள குளியல் மிஷின் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தைக்கு வரவுள்ளது.

குளிக்கத் தயங்கும் சோம்பேறிகளுக்காக ஜப்பான் பொறியாளர்கள் ஒரு அற்புதமான குளியல் மிஷினை உருவாக்கியுள்ளனர். துணிகளை துவைக்க நாம் வாஷிங்மெஷினைப் பயன்படுத்துவதுபோல், நம்மை குளிக்க வைக்க ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் ஜப்பானிய பொறியாளர்கள். மிராய் நிங்கன் சென்டகுகி இந்த மெஷினை ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ உருவாக்கியுள்ளது. இந்த மனித வாஷிங்மெஷினுக்கு மிராய் நீங்கன் சென்டகுகி (Mirai Ningen Sentakuki) என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஒரு 15 நிமிடம் நாம் இந்த மெஷின் டப்பில் உட்கார்ந்தால் போதும், இந்த AI மெஷினானது நம்மை குளிக்க வைத்து ட்ரை செய்து வெளியே அனுப்பி விடுமாம். அதாவது, ஒரு நபரின் உடலை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் முழுமையாக சுத்தம் செய்யும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர். இன்னமும் சந்தையில் விற்பனைக்கு வராத இந்த மிஷினை, அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒசாகா கன்சாய் எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்படுத்த அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வெறும் பார்வைக்காக மட்டும் வைக்காமல், அந்த எக்ஸ்போவில் இந்த மெஷினை மக்கள் பயன்படுத்திப் பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, எக்ஸ்போவில் ஆயிரக்கணக்கானோர் இந்த மெஷினை பயன்படுத்தி தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த மெஷின் பார்ப்பதற்கு பாட் அல்லது காக்பிட் போன்று காட்சியளிக்கிறது. இதில் குளிக்க விரும்பும் நபர், அதன் உள்ளேயுள்ள பிளாஸ்டிக் பேடில் அமர வேண்டும். இந்த மெஷினில் உள்ள AI சிஸ்டமே, உள்ளே அமரும் நபரின் உடல் மற்றும் தோல் வகையின் அடிப்படையில் வாஷ் மற்றும் ட்ரை விருப்பங்களை தீர்மானித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமரும் நபரின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப, அந்த டப்பானது பாதி வெந்நீரால் நிரப்பப்படும்.

அதன்பிறகு, நீரின் ஜெட்களிலிருந்து டைனி ஏர் பப்பில்கள் உருவாகத் தொடங்கும். இந்த குமிழிகள், உள்ளே அமர்ந்திருக்கும் நபரின் தோலில் இருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்யும். நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உடலின் உயிரியல் தகவல்களை சேகரித்து, உள்ளே இருப்பவர் சரியான வெப்பநிலையில் குளிப்பாட்டப்படுவதை உறுதி செய்யும். அதோடு, மெஷினில் உள்ள ஏஐ சென்சார்கள், மனித உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து, மனதை அமைதிப்படுத்தும் வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்பும்.

எனவே, மனித தோலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதோடு மட்டுமின்றி, அதில் குளிப்பவரின் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இந்தக் குளியல் அமையும் என அதன் பொறியாளர்கள் கூறுகின்றனர். ஒசாகா கண்காட்சிக்குப் பிறகு, மிராய் நீங்கன் சென்டகுகி சந்தை விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் என ‘சயின்ஸ் கோ’ நிறுவனத்தின் தலைவர் அயோமா தெரிவித்துள்ளார்.

———————-

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *