செய்திகள்

ஜனாதிபதி மாளிகை நோக்கி சந்திரபாபு நாயுடு பேரணி

புதுடெல்லி, பிப். 12

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி சந்திர பாபு நாயுடு பேரணி நடத்தினார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை இன்று சந்தித்து முறையிட உள்ளார்.

அதற்கான ஊர்வலம் இப்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதன் உச்சக்கட்டமாக ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்தே விலகினார். இந்த விவகாரத்தில் இருந்துதான் பாரதீய ஜனதாவை குறிப்பாக மோடியை பகிரங்க விமர்சனம் செய்ததுடன், பாரதீய ஜனதாவுக்கு எதிரான பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

நேரில் ஆதரவு அதன்படி நேற்றுகூட, டெல்லியில் அவரது தலைமையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போனார்கள்.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்ப்பதாகவும், இந்த அநீதி தேசிய ஒருமைப்பாட்டில் எதிர்வினைகளை கண்டிப்பாக உருவாக்கும் என்று 5 கோடி ஆந்திர மக்கள் சார்பில் எச்சரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை இன்று சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நேரில் முறையிட்டு அது சம்பந்தமான மனுவையும் அளிக்க போவதாகவும் நாயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதியை சந்திப்பதற்கான பேரணி இன்று சந்திரபாபு நாயுடு தலைமையில் தொடங்கி உள்ளது. ஜனாதிபதி மாளிகை நோக்கி நடைபெற்று வரும் இந்த பேரணியில், ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனாலும், சந்திரபாபு நாயுடுவுடன் 10 பேருக்குதான் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *