புதுடெல்லி, ஜன. 25–
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்–சிசிக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க அதிபா் எல்–சிசி நேற்று டெல்லி வந்தடைந்தார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ள பத்தா எல்–சிசியுடன் 5 அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இந்தியா வந்துள்ளனர்.
விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த எல்–சிசிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்டோர் கைகுலுக்கி வரவேற்றனர்.
இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து அல் சிசிக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல், டெல்லி வந்துள்ள எகிப்து தூதுக்குழுவினரை பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் சிசி அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பத்தா எல்-சிசி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இச்சந்திப்பின்போது, வேளாண்மை, எண்மம் (டிஜிட்டல்), வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதிபர் எல் சிசியை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
முதல் முறையாக நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவப் படை பிரிவினரும் பங்கேற்கின்றனர்.
அரபு–ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நட்புறவை மேம்படுத்த இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2021–22 நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் 712 கோடி டாலராக (சுமாா் ரூ. 58,122 கோடி) இருந்தது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.