புதுடெல்லி, மே 14–
‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் அங்குள்ள 9 பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன. எல்லைக்கோட்டை தாண்டாமல் ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா நடத்தி முடித்த துல்லிய தாக்குதல், உலக நாடுகளை அசர வைத்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், இந்தியா – பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் ஜனாதிபதியுடன் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்பு படைகளின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.