பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி, ஜூன் 6–
சுரினாம் நாட்டின் உயரிய விருது ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து, ஜனாதிபதி தனது சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:–
இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய–சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’ விருது பெற்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். இந்த விருது, சுரினாம் அரசு மற்றும் நமது நாடுகளுக்கு இடையே நீடித்த நட்புறவைக் குறிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.