ராகுல்காந்தி, ப.சிதம்பரம் கண்டனம்
டெல்லி, செப். 9–
இந்திய மக்கள் தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரான எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டனர் என்று ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மாலை விருந்து அளிக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தி கண்டனம்
இந்நிலையில், இதுகுறித்து பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, ராகுல்காந்தி கூறியதாவது:-
பாரத் நாட்டின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டனர். அது சில உண்மைகளை உணர்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை. இது, மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு பின்னால் எந்த மாதிரி சிந்தனை இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறி உள்ளார்.
அதேபோல், ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் கண்டன பதிவில், உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஒரு நாட்டின் விருந்துக்கு, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பில்லை என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மக்களாட்சி இல்லாத அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இத்தகைய நிலை இருக்க முடியும். அந்த நிலைக்கு இன்னும் இந்தியா போகவில்லை என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.