அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, மார்ச்.15
தமிழ்நாட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 1,37,563 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 2,81,96,899 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி முன்னிலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது:–
முதலமைச்சரின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது.
சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ‘மைஸ்’ சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகள் கண்டறியப்பட்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், முகாம்கள், ரோப்வேகள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம், மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம், பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ரா.வீருசாமி
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் இரா.வீருசாமி, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் இ.கமலா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.