வாஷிங்டன், நவ. 6
அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு யூகங்களையும், கருத்து கணிப்புகளையும் தகர்த்து, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கியது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78), ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் (60), போட்டியிடுகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கடந்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களி்ல், 226 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கி உள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
செனட் சபையிலும்
டிரம்ப் கட்சி முன்னிலை
அதிபர் தேர்தலுடன் அமெரிக்க செனட் சபைக்கான தேர்தலும் நடந்தது. இதில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தேர்தலில், டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளர்கள், பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் வெற்றி பெற்று விட்டனர். கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியினர் 43 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.
அதேபோல், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் டிரம்பின் குடியரசு கட்சி 186 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது, கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 160 இடங்களில் வென்றுள்ளது. பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.
டெக்சாஸ், ஓஹியோ, நெப்ராஸ்கா, நார்த் டகோடா, சவுத் டகோடா, லூசியானா, வயோமிங், இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, ப்ளோரிடா உள்ளிட்ட 24 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஸ்விங் மாகாணங்களில் வடக்கு கரோலினாவைத் தொடர்ந்து ஜார்ஜியா மாகாணத்தையும் டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், ரோட்ஸ் ஐலாண்ட், கனெடிகட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். கூடவே அதிக எலக்டோரல் கொண்ட கலிபோர்னியா மாகாணத்தையும் கமலா ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார்.
எலெக்டோரலை பொறுத்தவரையில் டிரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 266 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 188 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் 266, கமலா ஹாரிஸ் 188 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளனர்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய்யான
கருத்துகணிப்புகள்
தேர்தலுக்கு முன்னரே டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே உள்ள போட்டி குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்றும், டிரம்புக்கு மக்கள் ஆதரவு 44 சதவீதம் உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது.
தனக்கு எதிரான பல்வேறு எதிர்மறை விவகாரங்களையும் பின்னுக்குத் தள்ளி டிரம்ப் முன்னிலைக்கு வந்து விட்டதாக கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக கூட பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், ‘டிரம்ப் அதிபர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்’ என்று செய்தி வெளியிட்டது.
இன்னொரு பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவிக்க இருந்ததாகவும், அதை அந்த பத்திரிகையின் உரிமையாளர் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படி பல்வேறு எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையிலும், வாக்காளர்கள் மனதில் இடம் பிடித்து டிரம்ப் கூடுதல் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது எண்ணப்பட்டது வரை, மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அவர், கமலாவை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார்.
தற்போது வரை டிரம்ப் 277 எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளையும், கமலா 226 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.