செய்திகள் நாடும் நடப்பும்

ஜனநாயகம் தலைநிமிர்ந்து பயணிக்க உங்கள் ஓட்டு யாருக்கு?


வை–மை வரும் நல்ல தலைமை – பாகம் 4: ஆர்.முத்துக்குமார்


தமிழகத்தில் ஒரு வழியாக வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றுவிட்டது. களத்தில் இருப்பது யார்? என்பது அத்தொகுதி வாக்காளர்களுக்கு தெரிய வந்து இருக்கும்.

வேட்பு மனுதாக்கல் முடிந்துவிட்டாலும் இறுதி பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடக்கும்.

தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் பிரான்சும் இங்கிலாந்தும் உண்டு. பிரான்சின் மக்கள் தொகை 6.73 கோடி பேராகும்! இங்கிலாந்தின் ஜனத்தொகையும் 6.77 கோடி பேர் மட்டுமே!

ஆக ஏப்ரல் 19 அன்று நமது வாக்காளர்களின் எண்ணிக்கை அவ்விரு நாடுகளுக்கு இணையாக இருக்கிறது! அத்தனை பேரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல சிறப்பான ஏற்பாடுகளை செய்தும் வருகிறது.

மொத்தத்தில் முதல் கட்ட வாக்கெடுப்பிலேயே உலகமே வியந்து பார்க்க வைக்கும் எண்ணிக்கை வாக்குப்பதிவு இருக்கும்!

வாக்காளர்கள் எண்ணிக்கை சாதனை என்றால் வேட்பாளர்கள் எப்படி? அங்கு தான் சிக்கலே! ஒரு தொகுதியில் நல்ல வேட்பாளர் என்று நினைத்து வாக்கை அவருக்கு போட நினைத்தால் அவரது கட்சிக்கு அதே மதிப்பு இல்லையே என வேதனைப் படலாம்.

வேறு தொகுதியில் நல்ல வேட்பாளரும் பிடித்த கட்சியும் இருந்தாலும் தொகுதி மாறி வாக்குப் பதிவு செய்ய முடியாது அல்லவா?

ஆனால் நாம் வாக்களித்து ஜெயித்த ஒருவர் சில நாட்களில் நம் தொகுதி பக்கமே வராது காணவில்லையே என ஆதங்கப்படலாம். ஊர் மாறிப் போய்விட்டால் பரவாயில்லை. அவர் கட்சி மாறிடவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

இப்படி பல சிக்கல்கள் இருக்கும் நமது ஜனநாயக முறை இதுபோன்றே தான் பல நூற்றாண்டுகளுக்கு தொடர வேண்டுமா?

ஒன்றை மறந்துவிடாதீர்கள். மாற்றம் தான் நிரந்தரம்! வேதனையுடன் அல்லது கோப எரிச்சலுடன் என்றாலும் மறவாமல் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை செய்து விட்டால் ஒரு நல்ல தலைவர் ஒருநாள் மாற்றங்கள் ஏற்படுத்தி செயல்பட பதவிக்கு வரத்தான் செய்வார்.

இன்றைய சிக்கல் பிரியாணியும் சாராய சமாச்சாரங்களும் ஜனநாயகத்தை பணநாயக சமாச்சாரமாக மாறி நம்மிடம் வேரூன்றி வருவதை பார்க்கின்றோம்.

ஆனால் எல்லா தரப்பினரும் மறவாமல் வாக்குப்பதிவு நாளில் ஜனநாயகக் கடமையை மகிழ்ச்சியுடன் செய்து விட்டால் நமது அடுத்த தலைமுறை தற்போது நிலவும் விரக்தியானவற்றைத் தாண்டி இந்தக் குழப்பங்களுக்கு என்ன தீர்வு எனச் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள்.

இளைஞர்களின் கையில் நாளைய உலகம் இருக்கிறது என்பார்கள், அந்த இளம் கூட்டணி வருங்கால புரட்சிகளுக்கு உன்னத பணியாற்ற நாம் தானே வழிகாட்டியாக வேண்டும்.

யாருக்கு ஓட்டு போடுவது; எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்பதை முதல்முறை வாக்களிக்க இருக்கும் உங்கள் வாரிசுகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், ஜனநாயகம் என்றால் என்ன? என்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்து அதன் சிறப்புகளை உணர வைத்தால் தேவையற்ற நச்சு அம்சங்களை களை எடுத்து விட அவர்கள் களம் இறங்கும் நாள் வரும் அல்லவா?

இன்று குடும்பம் குடும்பமாக வாக்களிக்க முற்படும் நேரத்தில் குடும்பவாரிசு விவகாரமும் பெரிய சவாலாக தோன்றலாம். முதல்வரின் குடும்பத்தார் கட்சியையும் ஆட்சி பொறுப்புகளையும் பிடித்து வைத்துக் கொண்டால் அது ஜனநாயகம் இல்லை என அரசியல் எதிரணி குற்றம் சாட்டலாம்.

ஜனநாயகத்தில் இவர் மட்டும் பதவிக்கு வரக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. யாரும் போட்டியிட்டு மக்களின் வாக்கை சம்பாதித்து வெற்றி பெறலாம் என்று தான் ஜனநாயகக் கோட்பாடு. அது அரசியல் பிரமுகர் வீட்டிற்கும் உண்டு. சாமானியனின் வீட்டு பிள்ளைக்கும் அதே உரிமை உண்டு.

இன்றைய பல தலைவர்களின் வாரிசுகள் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் குடும்பத்தில் வாரிசுகள் என்று யாரும் இல்லையே. இருந்திருந்தால் அவர்கள் மேற்கொண்ட நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்யும் வலிமை அவர்களுக்கு வந்திருக்குமே என்றும் யோசிக்க வைக்கிறது.

அதே எண்ண ஓட்டத்தில் இன்றைய தலைவர்களின் வாரிசோ, பிரபல அரசியல்வாதிகளின் குடும்பத்தாரோ தேர்தலில் வேட்பாளராக இருந்து, அவர் நல்லவர், வல்லவர் என்று உயர்ந்து இருந்தால் அவருக்கு வெற்றி வாய்ப்பு தருவதில் என்ன தவறு?

தீய சக்தி என்று வளர்ந்து விட்ட ஒரு தலைவரை எதிர்க்கும் நல்ல வேட்பாளர் எந்த கட்சியில் இருந்தால் என்ன? அவருக்கே வாக்களித்து நமது பாராட்டையும் உரியவருக்கு கண்டிப்பான எதிர்ப்பையும் கூறிடலாம் அல்லவா?

எது எப்படியோ, அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகம் பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களுக்கு தயாராகிவிட்டது.

கட்சி, ஜாதி, மத காரணங்களுக்காக மட்டுமின்றி உங்கள் தொகுதி வேட்பாளரின் தகுதியையும் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

வருங்கால தொழில்நுட்பங்கள் பற்றிய புலமை, அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றல் கொண்டவர் என்று இருப்பவரை தேர்வு செய்தால் அரசியல் ரீதியாக நீங்கள் தோற்றவருக்கு ஓட்டு போட்டு விட்டோமே என வருத்தப்படலாம். ஜனநாயகம் என்றென்றும் நிலைத்து நீண்ட பயணத்தை தொய்வின்றி தொடர உங்களது அந்த ஒரு ஓட்டு தான் அழகிய கோலத்தின் முக்கிய புள்ளி என்பதை உணர்ந்து வாக்களிக்கத் தயாராகி விட வேண்டும்.

நல்ல வேட்பாளரை உங்கள் தொகுதியில் ஆராய்ந்து, தேடிக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஏப்ரல் 18 மாலை வரை நேரம் இருக்கிறது. மறுநாள் தெளிவாக நிமிர்ந்து நடைபோட்டு உங்களது தீர்ப்பினை வாக்காக அளித்து மகிழலாம்!


மேலும் வாசிக்க:

தமிழகத்தில் தேர்தல் களம் தயார்: வை–மை தரும் நல்ல தலைமை பாகம் –1

உலகமே பாராட்டும் தேர்தல் கட்டுமானம்: வை–மை தரும் நல்ல தலைமை பாகம் –2

தேர்தல் விதிமுறைகள் பின்பற்றலில் அலட்சியம் ஏன்?: வை – மை வரும் நல்ல தலைமை… பாகம்–3


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *