சிறுகதை

ஜனநாயகக் கடமை – ராஜா செல்லமுத்து

அன்று வாக்குப்பதிவு, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே வாக்களித்தவர்கள் புதிதாக வாக்களிப்பார்கள் என்று ஊரே கூடி நின்று கொண்டிருந்தது. பார்வதியம்மாள் படுக்கையில் கிடந்தார்.

இன்றோ நாளையோ இறந்து விடலாம் என்ற அளவில்தான் அவரின் நிலை இருந்தது..அவரை புறக்கணித்து விட்டு ,அத்தனை பேரும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்று கொண்டிருந்தார்கள்.

பவுனு பவுனு தன் பெயரன் பெயரை சொல்லிக் கொண்டே இருந்தார் பார்வதியம்மாள்.

என்ன கெழவி சும்மா படுக்க மாட்டியா? அவனவன என்ன பாடு பட்டுட்டு இருக்கிறான். நீ எப்ப பாத்தாலும் கூப்பிட்டு இருக்க என்று பார்வதியை திட்டினான் பவுன். மறுபடியும் பாட்டி பவுன் என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்.

அவன் இரண்டு முறை கேட்டுவிட்டு அதற்குமேல் பார்வதி பாட்டியை சட்டை செய்யவில்லை.

வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டு போட்டு வந்தார்கள்.

என்னத்த ஓட்டு போடுறது எல்லாம் சரிதான் என்று நொந்து கொண்டார்கள் சில பேர்கள்.

பார்வதி பாட்டி மட்டும் தன் படுக்கையில் கிடந்தவாறு புலம்பிக் கொண்டிருந்தார்.

முதலில் பவுன் என்று கூப்பிட்ட பாட்டி இப்போது அரசம்மா என்று மருமகளின் பெயரை சொல்லிவிட்டார்.

என்ன கிழவி சும்மா படுக்க மாட்டியா? ஏன் இப்படி எங்களை உசுர வாங்குற? என்று அரசம்மா சொல்ல பார்வதி பாட்டி ஏதோ சைகை சொல்லிக் கொண்டிருந்தார்.

அது யாருக்கும் பெருசாக தோன்றவில்லை. படுத்த படுக்கையில் கிழவி கிடக்கும் அந்த இடம் அவரின் நீர் வாடையும் அவரை சுற்றி உள்ள அழுக்கு துணி வாடைடையுமாயிருந்தது.

அவர் அருகில் யாரும் செல்லவில்லை. ஆனால் ஏதோ சைகை செய்து கொண்டிருக்கிறார் மட்டும் என்பது எல்லோருக்கும் விளங்கியது.

பவுன், அரசம்மாள் என்று கத்திக் கத்தி பார்த்த கிழவி….

யாரும் தன்னை சட்ட செய்யாததால் கட்டிலை விட்டு மெல்ல நகர்ந்து கீழே வந்தார்.

ஐயா என்று விரலைவிட்டு காண்பித்தார்.

பாட்டியின் இம்சை தாங்காத பவுன் பாட்டியின் அருகே வந்தான். ஒனக்கு என்ன வேணும்? என்று கொஞ்சம் கோபமாக கேட்டான்.

பார்வதி பாட்டி தன் இரு கைகளை எடுத்து ஓட்டுப் போடுவதற்கு அவர் கைவரலை தொட்டு தொட்டு காண்பித்தார்.

அப்போதுதான் அவனுக்கு விவரம் தெரிந்தது.

ஓட்டு போடணுமா? என்று அவன் கேட்டான்.

ஆமா என்று தலையாட்டினார் பாட்டி.

சாக போற வயசுல உனக்கு ஓட்டு?என்று கேட்டதும்

பாட்டி மறுபடியும் மறுபடியும் தன் விரலை காட்டி ஓட்டு போடுவதற்கான அடையாள மை வைக்கும் இடத்தில் தொட்டுத்தொட்டு காண்பித்தார்.

அவன் அவன் என்ன பாடுபடுறான் என்று பார்வதியை திட்டினான்.

இல்ல நான் ஓட்டு போடணும்; ஓட்டு போடணும் என்று பார்வதி பாட்டி சொன்னார்.

அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்று விட்டான்.

டேய் இந்த கிழவியை கூட்டிட்டு ஓட்டுப்போட போ, இல்லன்னா செத்தா கூட இந்த கட்டை வேகாது என்று பவுனின் அம்மா சொன்னார்.

ஒரு கட்டத்தில் பார்வதி பாட்டி அழுதே விட்டாள். விரலை காட்டி காட்டி அழுவதால் வேறுவழியில்லாமல் பார்வதி பாட்டி கையோடு தூக்கிக்கொண்டு ஓட்டுச்சாவடிக்கு போனான் பவுன்.

அப்போது அவர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

பாத்தியா சாகப்போற கிழவி கூட தன்னுடைய ஜனநாயகக் கடமையை எவ்வளவு சரியா செய்யுது.

இது நம்முடைய உரிமை. இது நம்முடைய சுதந்திரம். இது நம்முடைய ஜனநாயகம் விட்டுக் கொடுக்க கூடாது என்று அதுவரை ஓட்டு போடக்கூடாது நினைத்திருந்த மக்கள் பார்வதி பாட்டியை பார்த்துவிட்டு வாக்குச் சாவடியை நோக்கி நடையை கட்டினார்கள் வாக்களிப்பதற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *