செய்திகள் நாடும் நடப்பும்

ஜனத்தொகை பெருக்கமும் வாழ்வியல் சிக்கல்களும்!

Makkal Kural Official

ஆர் முத்துக்குமார்


2021ல் நடைபெறவேண்டிய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக நடக்காமல் போனது. இதனால் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பே தற்போதைய அனைத்து புள்ளிவிவரங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) செப்டம்பர் 24, 2023 அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2024ல் இந்தியாவின் மக்கள் தொகை 138-142 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் தென்மாநிலங்களின் மக்கள் தொகை பங்களிப்பு 14%லிருந்து 12% ஆகக் குறையும் வடமாநிலங்களின் பங்களிப்பு 27%லிருந்து 29% ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 30.9% ஆக இருந்த நிலையில் 2024ல் இது 24.3% ஆகக் குறையும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. நடுவயது 24-இல் இருந்து 28-29 ஆக உயரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வயதானவர்களின் சதவீதம் அதிகம் எனவும் அறிக்கை கூறுகிறது.

தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக சில குழப்பங்களை உருவாக்கியுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மத்திய அரசில் வழங்கப்படும் நிதி பங்கீடு பாதிக்கப்படலாம் என தென் மாநிலங்கள் அஞ்சுகின்றன. 2026க்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையக்கூடும் என்பதால் அவர்களது பாராளுமன்ற சக்தி குறையுமோ என்ற கவலை அதிகரிக்கிறது.

இந்த விவாதம் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கூடுதல் குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நாயுடு, “குறைந்த குழந்தைகள் கொண்டால் இளைய தலைமுறை குறைந்து, மாநிலத்தில் முதியோர் சதவீதம் அதிகரிக்கும்,” எனவும் “தென்னிந்தியாவில் இளைஞர்கள் குறையலாம்” எனவும் ஆவேசமாக பேசினார்.

ஒரு திருமண நிகழ்வில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளத்தோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்” என்று சொன்னவர் தொடர்ந்து, “ஆனால் இன்று நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறையும் நிலை வந்திருக்கும்போது ஏன் அளவோடு பெற வேண்டும். நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆனால், ‘SOUTH vs NORTH: India’s Great Divide’ என்ற நூலின் ஆசிரியர் ஆர். எஸ். நீலகண்டன், மக்கள் தொகை குறைப்பு இயல்பான நிகழ்வாகவே நடந்துகொள்வது பெண்களை கல்வியாற்றச் செய்வதன் மூலம் என்கிறார். “உலகத்தில் மக்கள் தொகை கடந்த 200 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது, இது மருத்துவ முன்னேற்றம் காரணமாகும். ஆனால், பெண்களை கல்வியால் மேம்படுத்தினால் மக்கள் தொகை தானாகவே குறையும்,” என அவர் கருத்து தெரிவித்தார்.

இவ்வாறு தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியைக் குறித்த விவாதமாக மாறியுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1950 களில் 6.2 சதவீதமாக இருந்தது. தற்போது 2.1 சதவீதமாகக் குறைந்திருக்கும் நிலையில் ஆந்திராவில் இது 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாகப் பெற்றுக்கொள்வது இளம் வயதினரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும், இது புரிகிறது.

2047 க்குப் பிறகு, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகம் இருப்பார்கள். ஜப்பான், சீனா, பல ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்துவிட்டது. அதிக குழந்தைகளைப் பெறுவது ஜனநாயக மன்னர்களான குடிமக்களின் பொறுப்பு என்ற காலகட்டம் வரும்! அப்போது குழந்தைகளை பெற்றுக்கொள்வது தேசத்தின் நலனுக்காக என பரப்புரை மேலோங்கி இருக்கும் காலம் வரப்போகிறது.

“பெண்களை படிக்கவைத்தால் மக்கள் தொகை குறைவது இயல்பாகவே நடக்கும். உலக மக்கள் தொகையைப் பொறுத்தவரை, கடந்த 200 ஆண்டுகளில்தான் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த 200 ஆண்டுகளில் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் இதற்கு முக்கியக் காரணம். பெண்களை படிக்க வைக்கும்போது மக்கள் தொகை அதன் இயல்பான அளவை நோக்கி குறைய ஆரம்பிக்கும். உலகில் ஏற்கனவே சுமார் 800 கோடி பேர் வசிக்கும் நிலையில் கூடுதல் குழந்தைகள் தேவையில்லை” என்கிறார் நீலகண்டன் அதுவும் சரிதான்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளான இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக மக்கள்தொகையில் சுமார் 36% ஆவர். சுமார் 1.34 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் 17% கொண்ட ஆப்பிரிக்கா இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட கண்டமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *