நாடும் நடப்பும்

ஜனத்தொகை நமது சொத்து: மனித வளம் நமது அடையாளம்


ஆர். முத்துக்குமார்


இது பெருமையான செய்தியா? ஆனால் இதுதான் உண்மை, நாம் ஜனத்தொகையில் சீனாவை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறோம்! இதை ஒரு வருடமாகவே ஐ.நா. உட்பட ஜனத்தொகையை உற்று கவனித்து வரும் சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகிறது.

இன்று நமது ஜனத்தொகை 142 கோடியாம். இது சீனாவை விட அதிகமாகும். இது நல்ல செய்தியா? இது பற்றிய ஆய்வு அறிக்கைகள் வர சில மாதங்கள் ஆகலாம், ஆனால் ‘நமது மனித வளம் நமது சொத்து’ என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது நினைவுக்கு வருகிறது.

1992–களில் நமது பொருளாதார தளர்வு கொள்கைகள் மேற்கு நாடுகளை வெகுவாக கவர்ந்தது. அதற்கு பிரதி பலனாக நமது இளைஞர்களுக்கு அவர்கள் நாடுகளில் பணியாற்ற வேலை வாய்ப்பு விசா வழங்க கோரினோம்.

கடந்த 25 ஆண்டுகளில் நாம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சந்தித்து வரும் வெற்றி சரித்திரம் அபாரமானது. இந்தியர்களுக்கு, குறிப்பாக ‘ஐ.டி’ பணியாளர்களுக்கு ஜெர்மனி உட்பட பல நாடுகளும் சிவப்பு கம்பள வரவேற்பை தந்து விசா வழங்கியது. இதுபோன்ற திறன் வலிமை கொண்ட ஊழியர்கள் படை இந்தியாவின் அடையாளமாக இருப்பதை மறந்து விடக்கூடாது.

நமது பிறப்பு விகிதம் அதிகரிப்பு அதிகம் கிடையாது. மாறாக சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது! அது மட்டுமா அவர்கள் நாட்டில் இறப்பு விகிதமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாகியுள்ளது, காரணம் ‘கொரோனா’ பெரும் தொற்று!

நாம் சாமர்த்தியமாகவே கொரோனா பெரும் தொற்றை சமாளித்து விட்டோம். மேலும் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்துவதிலும் சாதித்துள்ளோம். நம் மண்ணிலேயே தயாரிக்க வைத்து நமது ஜனத் தொகைக்கு 20 மாதங்களில் சென்றடைய செய்ததும் மத்திய – மாநில அரசுகளின் சாதனையாகும்.

நமது வெளியுறவு கொள்கையை உலக பார்வையாக விரிந்து இருப்பதால் உலக ஏழை நாடுகளுக்கு நம்மால் இலவசமாகவோ, குறைந்த விலையிலோ சென்றடைய செய்தோம்.

இப்படியாக நமது மனித வளம் மற்றும் அவர்களது உழைப்புத் திறன் உலக நாடுகளின் பார்வையில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. ஆகவே நமது ஜனத்தொகை அதிகரிப்பை பற்றி கவலை உடனடியாக தேவையில்லை.

அதுமட்டுமா? நமது ஜனத்தொகையில் 50 சதவிகிதம் 25 வயதை தொட்டவர்களாக இருக்கிறார்கள்! அதாவது இன்றைய நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

2045 வரை மிகச் சிறப்பாக பணியாற்றும் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் கொண்ட தலைமுறை இன்று உலக ஜனத்தொகை பட்டியலில் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது.

குடும்பக் கட்டுப்பாடு விவகாரத்தில் முதல் அடியை நாம் 1950 –களில் எடுத்து வைத்தோம், 1960–களில் ‘நாம் இருவர் – நமக்கு இருவர்’ என்று ஜனத்தொகையை குறைக்க உறுதி எடுத்தோம். பிறகு 1980–களில் ‘நாம் இருவர் – நமக்கு ஒருவர்’ என்று சமூக சிந்தனையுடன் வாழ்ந்து வருகிறோம்.

அன்று போன்று வாழ்ந்தாலும் நமது ஜனத்தொகை விகிதம் குறைந்து விடவில்லை என்ற கோணத்தில் இச்சிக்கலை நோக்கினால் நமது பொருளாதார வீழச்சியை பற்றிய அச்சமும் மேலோங்குகிறது.

நமது ஜனத்தொகையில் பெருவாரியான சதவிகிதம் ஏழைகள் அல்லது பரம ஏழைகள் என்ற வட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் ஏழ்மை அறவே அகல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

இனிவரும் நாட்களில் இன்றைய இளம் தலைமுறை பள்ளி செல்லும் மாணவர்கள் – நல்ல முன் உதாரணமாக வாழ உறுதி ஏற்க வேண்டும். சட்ட திட்டம் எல்லாம் நமக்கு கிடையாது என்பது போல் சாலை விதிகளை மதிக்காமல் இருப்பதை வாழ்ந்து காட்டினால் வரும் தலைமுறையும் வாழையடி வாழையாய் தப்பான கோணத்தில் தானே வாழ்க்கை பயணத்தை தொடர்வார்கள்!

மத்திய –மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் அனைவருக்கும் கல்வி, நகர்புறத்தை விட இரண்டாம், மூன்றாம் நிலை பின்தங்கிய நகரப் பகுதிகளை உயர்த்திட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது வரை செயல் திட்டத் அமைத்தாக வேண்டும்.

நகரப் பகுதிகளிலேயே சாலை வசதிகள் சேதமடைந்து, பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பது இல்லை, பிறகு ஏன் பின்தங்கிய பகுதிகளில் மேம்பட்ட வசதிகள் என்ற பார்வையை விட்டு விட வேண்டும்.

புதிய நகரங்களாக கிராமப் பகுதிகள் உருவானால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நாடெங்கும் உள்ள கிராமங்களை விட்டு வெளியேறாமல், ஒவ்வொரு பகுதியையும் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதி செய்யும் பகுதியாக உயர்ந்து நாட்டின் பொருளாதார உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும்.

நமது கல்வி, நிதி, விவசாய கட்டுமானங்கள், நகர்புற வசதிகள் எல்லாம் கிராமங்களில் உருவாகி வளர்ச்சியை கண்டால் நகரியம் குறைந்து, நாடே வளர்ச்சியை கண்டு வெற்றிகரமாக முன்னேறிவிடும்.

இந்த ஆண்டு ‘ஜி 20’ பணக்கார நாடுகளின் தலைமையில் இருக்கும் நாம் விரைவில் ‘ஜி 20’ பட்டியலில் முதல் நாடாக அதாவது மிகப் பெரிய பணக்கார நாடாக உயர நாம் ஒவ்வொருவரும் பங்களிப்பு உணர்வோடு செயல்பட உறுதியாக இருப்போம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *