சென்னை, மார்ச் 2–
சென்னையை அடுத்த சோழவரத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் போலி குருடு ஆயிலை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை தயாரித்த 9 பேர் கும்பலை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் போலி கலப்பட ஆயில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், எஸ்ஐ திருஞானசம்மந்தம், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் தனிப்படையினர் நேற்று மாலை 5 மணியளவில்
சோழவரம் நல்லுார் கிராம் பகுதியில் இருந்த குருடு ஆயில் தயாரிக்கும் கம்பெனியை சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக கலப்பட ஆயில் தயாரிப்பது தெரியவந்தது. மேலும் அவற்றை மும்பை பகுதியைச் சேர்ந்த கம்பெனியின் நிறுவனர் துளசி சிங் ராஜ் ராஜ்புட் என்பவர் மூலம் வினியோகம் செய்வது தெரியவந்தது. அதனையடுத்து கம்பெனியின் மேலாளர்கள் உபியைச் சேர்ந்த அசோக் (39), முகேஷ் குமார் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அங்கு வேலை செய்து வந்த ராம்சிங் (28), பிந்திரபிரசாத் (27), அசோக்குமார் (22), தீபக் (18), மன்சாராம் (25) மற்றும் அந்த கம்பெனியில் இருந்து போலி ஆயிலை ஏற்றிச் செல்ல வந்த டேங்கர் லாரிகளின் ஓட்டுனர்கள் கடலூரைச் சேர்ந்த உதயராஜ் (48), திருவண்ணாமலை கிருஷ்ணமூர்த்தி (47) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக பூமிக்கடியில் டேங்கர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,70,000 லிட்டர் கலப்பட ஆயிலையும் போலீசார் கைப்பற்றினர்.