அமைச்சர் சிவசங்கர் தகவல்
சமூக வலைதள செய்திகளுக்கு மறுப்பு
சென்னை, ஜன.30–
முதலமைச்சரின் உத்தரவுப்படி, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
முதலமைச்சர், கடந்த 22.1.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த போது, சிவகங்கை- திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் உடனடியாக அக்கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கிணங்க, சிவகங்கை திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக அனைத்துப் பேருந்துகளும் கடந்த 22–ந் தேதி முதல் நின்று செல்கின்றன. இது குறித்து 28–ந் தேதி அன்று சில சமூக வலைதளங்களில் முதலமைச்சரின் உத்திரவு பின்பற்றப்படவில்லை என தவறான தகவல் வெளியானது தெரிந்தவுடன், உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் (வணிகம்) பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்து, கல்லூரி முதல்வரிடம் சென்று பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தார்.
முதல்வருக்கு நன்றி கடிதம்
மேலும், துணை மேலாளரிடம் கல்லூரி முதல்வர், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செய்வதை கண்காணித்திட தீனதயாளன் என்ற பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டதில் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.