மொகடீசு, பிப். 2–
அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்பே, இஸ்ரேல் உடனான போரை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் கதறுவீர்கள் என ஹமாஸ் அமைப்பை எச்சரித்த டிரம்ப், அதற்கு கெடுவும் விதித்தார். இதையடுத்து இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
பதவியேற்றது முதலே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளுக்கான வரியை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதேபோல் ரஷ்யா – உக்ரைன் இடையேயும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்ள ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அதிரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
தலைவர்கள் சுட்டுக்கொலை
அதிபர் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க ராணுவம், சோமாலியாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் குகைகளில் பதுங்கியிருந்த ஏராளமான ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் துல்லிய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் தங்கிருந்த குகைகளும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவில், “குகைகளில் பதுங்கியிருந்த இந்த கொலையாளிகள், அமெரிக்காவையும் நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தினர்” என பதிவிட்டுள்ளார். மேலும் “தாக்குதல்களில் அவர்கள் வசிக்கும் குகைகள் அழிக்கப்பட்டன. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே சோமாலியா ஜனாதிபதி அலுவலகம், நாட்டின் வடக்குப் பகுதியில் மூத்த ஐஎஸ் தலைமையைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக டுவிட்டரில் அறிவித்துள்ளது.