செய்திகள்

சோனியா – ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, மே.24-

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர்.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

நேற்று மாலை 4.35 மணிக்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு சோனியா காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சோனியா காந்தி 2 நாட்களுக்கு முன்புதான் சிகிச்சை முடிந்து வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பினார். அவரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அப்போது ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 முக்கியமான விஷயங்களை சோனியா காந்தியிடம் பேசினார்.

அதாவது, கவர்னர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 குறிப்பாணைகளை வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும்படி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்க காங்கிரஸ் முதல்-மந்திரிகளிடம் வலியுறுத்துமாறு சோனியா காந்தியிடம் கேட்டுக்கொண்டார். அது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வலியுறுத்தியதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது என்றும் நேரில் கூறினார். இது தவிர அரசியல் தொடர்பாகவும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழக அரசின் வைகை இல்ல கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் எ.வ.வேலு விரிவாக கூறினார். இதையடுத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்ற முதலமைச்சர், அங்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை டாக்டர் பரமேஸ்வரனையும், அவருடைய குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு, பின்னர் அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு தமிழக அரசின் பொதிகை இல்லத்துக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்.

சோனியா வுடன் நடந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில், சோனியா காந்தியையும், அன்பு சகோதரர் ராகுல்காந்தியையும் டெல்லியில் அவர்களது இல்லத்தில் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. ஒரு போதும் இது வெறும் சந்திப்பாக இல்லாமல், குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வையே அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *