அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

சோதனை அறை…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஆயிரம் தடவைக்கு மேல் சென்னை விமான நிலையத்திலிருக்கும் கண்ணாடிக் கதவுகள் விழுந்து நொறுங்கியதைக் கவனிக்காமல் ,அது எதற்கு மறுபடியும் மறுபடியும் உடைகிறது? என்று தீர ஆராய்ச்சி செய்யாமல் சாதாரணப் பயணிகளை மட்டும் தீவிரமாகச் சோதனை செய்த பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதித்தார்கள் சோதனை அதிகாரிகள்.

வானத்தில் பறவையாய் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தரை இறங்கி, தன் சக்கரக் கால்களில் வேகமாக உருண்டு சென்றன.

முதன் முதலில் விமானம் ஏறிக் காது அடைத்து ,வாந்தி எடுத்து நின்ற பயணிகள் . விமானத்தில் ஏறி ஏறியே சலித்துப் போன பயணிகள் என்று அந்த விமான நிலையம் முழுவதும் பரவிக் கிடந்தார்கள்.

தரையிறங்கிய விமானங்களில் ஒரு விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது .அதனுடைய அறிவிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு பயணிகளையும் சோதனை அறையில் வைத்து சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

தயாளன் ,அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தத்திலிருந்தான். அதற்கான விசா, பாஸ்போர்ட் எல்லாம் பரிசோதனை செய்த பிறகு அவனுடைய உடமைகளைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்கள் சோதனை அதிகாரிகள்.

மற்றவர்களை எல்லாம் தொட்டு த் தடவி எதுவும் இல்லை என்று அனுப்பிய பிறகு தயாளனை மட்டும் தடவித் தடவி சோதனை செய்தார்கள். மெட்டல் டிடெக்டரை வைத்து சோதனை செய்தபோது, ஒரு விதமான கீக்கீ சவுண்ட் அடிக்க ,மற்ற பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரிகள் எல்லாம் தயாளனை நோக்கி வந்தார்கள்.

இவர சரியா சோதனை செய்யுங்க . ஆளப் பாத்தா ஒரு மாதிர திருட்டு முழி முழிச்சிட்டு இருக்கார். சரியா சோதனை பண்ணுங்க ” என்று சுற்றி இருந்த சோதனை அதிகாரிகள் எல்லாம் சொல்ல தயாளனை அங்கு இருந்த சேரில் அமர வைத்தார்கள். அவர் கொண்டு வந்திருந்த நான்கு, ஐந்து பெரிய பெரிய பைகளில் இருந்த துணி,

மசால், சமையல் சாமான்களை எல்லாம் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்தார்கள்

” சார் என் பொண்ணு அமெரிக்காவுல இருக்கா. நாங்க கிராமத்துல பிறந்தவங்க. என் பொண்ணு படிச்சு இப்ப அமெரிக்காவுல பெரிய கம்பெனில வேலை பாத்துட்டு இருக்கா அவளுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தான் இங்கிருந்து எடுத்துட்டு போறேன். நான் தீவிரவாதி எல்லாம் இல்ல சார். விவசாயி என்னைய விட்டுருங்க ” என்று கெஞ்சினார் தயாளன்.

” அதெல்லாம் முடியாது. நீங்க கொண்டு வந்திருக்கிற பொருள்ல ஏதோ அபாயகரமான பொருள் இருக்கிறதா எங்களுக்கு சிக்னல் காட்டுது. உங்கள விட மாட்டோம் இங்கயே இருங்க ” என்று சோதனை அதிகாரிகள் சொல்ல, துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள், தயாளனைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். இருக்கையில் அமர வைக்கப்பட்டார் தயாளன்

” சார் நான் எந்தத் தப்பும் செய்யல. நான் விவசாயி .விவசாயம் பண்றத தவிர எனக்கு வேற எதுவும்

தெரியாது. நீங்க சொல்ற தீவிரவாதம். ஆயுதம் எல்லாம் எனக்கு தெரியாது சார்” என்று தயாளன் பேச

” எதுவும் பேசாதீங்க அமைதியா உட்காருங்க” என்று சோதனையாளர்கள் அவர் கொண்டு வந்திருந்த அத்தனை பைகளிலும் இருந்த பொருட்களைத் தூக்கி வீசினார்கள். அவர் செல்ல வேண்டிய கனெக்சன் விமானம் புறப்படத் தயாராகி நின்றது. எத்தனையோ முறை அறிவிப்பு செய்யப்பட்டது. அதை எல்லாம் பொருட்படுத்தாத சோதனையாளர்கள் தயாளனை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை

” சார் நான் கிளம்புறேன். என்னை விட்டுருங்க. என் பொண்ணு காத்துட்டு இருப்பா ” என்று சொல்லிப் பார்த்தார். அவரை அனுமதிக்கவே இல்லை சோதனையாளர்கள் .அவரின் பெயரை எத்தனையோ முறை விமான நிலையத்தில் உச்சரித்தார்கள் .அதை எல்லாம் கண்டுகொள்ளாத சோதனையாளர்கள். தயாளனை மட்டும் விமானத்தில் போக அனுமதிக்க முடியாது என்று எதிர் பதில் சொல்லி அனுப்பினார்கள்.

தயாளனுக்கு கை, கால் ஓடவில்லை.

“சார் என்னைய விடுங்க பிளைட்ல போகணும் ” என்று அழுகாத குறைவாகச் சொன்னார் தயாளன்.

” உங்கள முழுசா சோதனை பண்ணிட்டு தான் அனுப்புவோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ” என்று சொல்லிய சோதனை அதிகாரிகள் அவர் கொண்டு வந்திருந்த மொத்தப் பொருட்களையும் தூக்கி வீசி எறிந்தார்கள்.மோப்பநாய் கூட வரவழைக்கப்பட்டு அங்குமிங்கும் அது ஓடி அலைந்து, அவர் வைத்திருந்த பையில் ஒன்றைக் கவ்வித் தூக்கிக் குரைத்தது.

“அந்த பையில் என்னவோ இருக்கு? அத சோதன செய்யுங்க” என்று சோதனையாளர்கள், சொல்ல,

” நாம என்ன தப்பு செஞ்சோம். ஏன் இப்படி நம்மள சோதனை பண்றாங்க? என்று நினைத்த தயாளன் ஓரளவுக்கு மேல் பேச முடியாமல் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாம் ? என்று அமைதியாக இருந்தார். அவர் புறப்பட வேண்டிய விமானம் ஓடுதளத்தில் ஓடி வானத்தில் இப்போது பறந்து கொண்டிருந்தது. அதற்குள் நாய் கல்வித் தூக்கிய பையில் எதையோ பார்த்த ஒரு சோதனை அதிகாரி,

“சார் கிடைச்சிருச்சு சார்” என்று குரல் கொடுக்க,

” நான் நெனச்சேன் இவரு சாதாரணமான ஆளா இருக்க முடியாது. எதையோ கடத்திக் கொண்டு போறாருன்னு. ஆளப் பாத்தா ஒரு மாதிரியா இருக்கார்னு என் மைண்டுக்குத் தோணுச்சு. அது சரியாப் போச்சு பாருங்க. ஹி இஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட் ஹிம் “என்று ரொம்ப வேகமாகப் பேசி அந்தப் பையில என்ன இருக்கு? என்பதை பார்க்க ஓடினார்கள் சோதனை அதிகாரிகள்.

ஒரு பையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்து மிரண்டு போனார்கள், சோதனை அதிகாரிகள். அதை உற்றுப் பார்த்த சோதனையாளர்களுக்கு ஒரு மாதிரியாகப் போனது. .

“என்ன இது?” என்று சோதனையாளர்கள் கேட்டபோது

“சார் நீங்க சோதனை செஞ்சதுல நான் போக வேண்டிய பிளைட் போயிடுச்சு . நீங்க கண்டுபிடிச்சு இருக்கிறது என் பேரனுக்கு நான் இங்க இருந்து வாங்கிட்டும் போற தீபாவளி துப்பாக்கி சார். என் பேரனுக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வர சொன்னான். அதான் வாங்கிட்டு வந்தேன். ஏதோ பெரிய தீவிரவாதிய பிடிக்கிறதா நினைச்சு என்னோட பயணத்தை கெடுத்துட்டீங்களே ” என்று தலையில் கை வைத்து அமர்ந்தார் தயாளன்.

வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், உண்மையிலேயே சுடக்கூடிய உயர்ந்த ரக துப்பாக்கியின் பாகங்களைத் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்,தீவிரவாதிகள் விமானம் ஆகாயத்தில் அழகாகப் பறந்து கொண்டிருந்தது.

தான் செல்ல வேண்டிய அடுத்த விமானத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் தயாளன்.

அப்போது, டமால் என்று சத்தம் கேட்டது.

“உண்மையிலேயே யாரோ சுட்டுட்டாங்க போல ” என்று நினைத்துப் பயணிகளும் அங்கு பணிபுரிந்தவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். ஆயிரத்தியோராவது முறையாக, விமான நிலையத்தில் இருந்த கண்ணாடிக் கதவு விழுந்து நொறுங்கியது.

சோதனை அதிகாரிகள் சோதனை அறைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.

#அறைகள் சொல்லும் கதைகள் #சிறுகதை

Loading

One Reply to “சோதனை அறை…! – ராஜா செல்லமுத்து

  1. சோதனை அறை. உண்மையான பதிவு. சாதாரண நபர்களை சோதனை செய்து பெரிய மனிதர்களை தப்பிக்க விடுவது காலத்தின்கட்டாயம்.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *