சுரேந்திரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த போது
வீடு பூட்டியிருந்தது.
‘ இந்த நேரத்தில் சியாமளாவும் குழந்தையும் எங்கே போயிருப்பார்கள்’ என்று யோசித்தவாறே தன்னிடமிருந்த மாற்றுச்சாவி மூலம் பூட்டை திறந்தான்.
டேபிள் மேல் பேப்பர் வெயிட்டுக்கு கீழே ஒரு கடிதம் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருந்தது.
எடுத்துப்படித்த சுரேந்திரன் அதிர்ந்தான்.
” ச்சை!” என்று டேபிள் மேல் ஓங்கி குத்தினான்.
ஒரு வாரமாக அவனுக்கும் சியாமளாவுக்கும் சண்டை.இன்று காலையில் சற்று பலமாகவே வெடித்து விட்டது.துணி மாற்றக்கூட விரும்பாமல் கட்டிலின் மேல் போய் ‘ தொப்’ பென்று விழுந்தான்.
யோசித்தான்; யோசித்தான்; யோசித்துக்கொண்டே இருந்தான்.
மாலை மணி ஆறரை. இப்போது ஒன்பதரையாக மாறியிருந்தது.
அப்போது பக்கத்து வீட்டிலிருக்கும் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டிருப்பது காதில் விழுந்தது சுரேந்திரனுக்கு.
அவனின் சிந்தனை தடைபட்டது.
தொடர்ந்து கணவன்- மனைவி
சண்டை பெரிதாகி வரவே, எரிச்சலுடன் எழுந்து வீட்டு காம்பௌண்ட் சுவரருகே போய் நின்று பக்கத்து வீட்டை
எட்டிப்பார்த்தான்.
அங்கே-
மனைவி பெட்டியுடன் நின்றிருக்க, அருகில் இரு குழந்தைகளும் தாயையொட்டி நின்றிருந்தனர்.லுங்கி- பனியனோடு கொஞ்சம் தள்ளாடியபடி இருந்த கணவன்,மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதை சத்தம் போட்டு தடுத்துக்கொண்டிருந்தான்.
சுரேந்திரனின் முகத்தை கண்டதும் அந்தப்பெண் அவனை நோக்கி ஓடிவந்து,
” அண்ணே, நீங்களே இந்த அநியாயத்தை கேளுங்க.எப்பப்பார்த்தாலும் குடி; குடி; குடிதான்! வீட்டுச்செலவுக்கு ஒத்தபைசா குடுக்கிறதில்லே.பிள்ளைகள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு மாசக்கணக்காச்சு.ஊரை சுத்தி கடன் வாங்கி வேற குடிக்கிறாரு.என்னால் இவர் கூட குப்பை கொட்ட முடியல.
அதான் எங்கம்மா வீட்டுக்கு போயிடலாம்னு புறப்பட்டேன்.
அதுக்கு அடிக்கிறார்ண்ணா!நீங்களே நியாயத்தை சொல்லுங்கண்ணே!” என்றாள்.
சுரேந்திரன் திருதிருவென விழித்துவிட்டு பதில் சொல்லாமல் திரும்பி வீட்டுக்குள் வந்து மீண்டும் படுத்துக்கொண்டான்.
பத்து நிமிடத்திற்கு பிறகு…
திடீரென்று எழுந்தான் .நேராக பிரிட்ஜ் அருகே சென்றான்.அதன் கதவை திறந்தான்.
அதற்குள்ளேயிருந்த மது பாட்டில்களை எடுத்தான்.அவைகளுடன் நேராக டாய்லெட் அறைக்கு சென்றான்.
பாட்டில்களின் மூடியை திறந்து
ஒவ்வொன்றாக கவிழ்த்து டாய்லெட்டில் ஊற்றிவிட்டு காலி பாட்டில்களை அருகிலிருந்த குப்பைக்கூடையில் போட்டான்.
ஒருவித திருப்தியுடன் மீண்டும் கட்டிலுக்கு வந்து படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை மணி ஆறு.
வேலூர் போகும் பஸ்ஸில் ஏறி
அமர்ந்திருந்தான் சுரேந்திரன்.
அவன் தன் மனதிற்குள் தன் மனைவியோடு இப்படி பேசிக்கொண்டிருந்தான்.
” ஸாரி சியாமளா! இனிமேல் நம்ம குழந்தை மேல் சத்தியமா
நான் குடிக்கமாட்டேன்.
சம்பளப்பணம் முழுவதையும் உன்கிட்டவே கொடுத்தர்றேன்.
இனிமேல் உன்னை அடிக்கவேமாட்டேன்.நம்பு!
‘ உங்கப்பன்கிட்ட போய் பணம் வாங்கிவா’ ன்னு இனி உன்கிட்ட வற்புறுத்த மாட்டேன்.எனக்கு புத்தி வந்திடுச்சு.பிரச்சினைகளை எழுதி ‘இனி விவாகரத்து தான்’ னு நீ எனக்கு லெட்டர் எழுதி வச்சிட்டு வந்துட்டே.அதெல்லாம் வேண்டாம்மா.என்னை மன்னிச்சு
குடும்பம் நடத்த நம்ம வீட்டுக்கு
வா சியாமளா…ப்ளீஸ்!”