சிறுகதை

சொற்பொழிவு | ராஜா செல்லமுத்து

குளிரூட்டப்பட்ட ஒரு ஏசி அறையில் நடந்து கொண்டிருந்தது தெய்வீகச் சொற்பொழிவு.

கடவுளைப் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார், “சடைமுடி” க்கவிஞன் அவர் பேசும் போது பக்தர்களின் உணர்ச்சிகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.

இந்தக் கடவுள் இல்லைன்னா நான் எப்பவோ என்னைக்கோ நீர்த்துப் போயிருப்பேன்.

கடவுள அடையிறது சாதாரண விசயமில்லை. அவர நேரா நாம சந்திக்க முடியாது. அதுக்கு குருஜியோட தொணை வேணும். குருஜிய கெட்டியா புடுச்சுக்கிட்டம்னா. அவர நம்ம கடவுள்ட்ட கண்டிப்பா கூட்டிப் போயி சேத்துருவாரு. கடவுள்கிட்ட நேரடியா பேசுற சக்தி குருஜி மாதிரி ஆளுககிட்ட தான் இருக்கு. கடவுளோட கருணையோ கருணை இப்ப பாருங்க. குருஜி என்ன சொன்னார். அவரு கோயிலுக்கு வரும் போது ஜீரோவாக வந்தாராம். இப்பப்பாருங்க. நான் ஹீரோன்னு சொல்றார். அவரு கடவுள கெட்டியா பிடிச்சிட்டாரு. அவரு இப்ப ஒசந்து நிக்கிறாரு.

“ஆமா, கோயிலுக்கு போன குருஜி மட்டும் தான ஒசந்திருக்காரு. சாமி கும்பிட்டு வந்த ஒரு ஆளையும் கடவுள் முன்னேத்தலையே”

“அவரு கோயில்ல ஒக்காந்திட்டு சாமி முன்னேத்துனாருன்னு சொல்றாரு. நமக்கும் ஒரு கோயில் இருந்தா நாமளும் ஒக்காந்து சம்பாரிக்கலாமே என்று பேசிக் கொண்டனர் தெய்வீகச் சொற்பொழிவைக் கேட்கும் ஆட்கள்.

சடைமுடிக்கவிஞனின் பேச்சில் சாரமிருந்தது கடவுளைப் பற்றிய நிறைகள் நிறையவே நிறைந்திருந்தன. இப்பபாருங்க எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. ரெண்டுகார் வச்சுருக்கேன். வீடு வந்துருக்கேன்; வசதியா இருக்கேன்;, எனக்கு எந்தக் கொறையும் இல்ல; அம்பாள் என்ன நல்லா காப்பாத்துது. இன்னும் நல்லா இருப்பேன் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

சடை முடிக்கவிஞர் –எப்பிடி இப்பிடி பேசுறாரு வாயத் தெறந்தா தமிழ் தண்ணி மாதிரி தடையில்லாம வெளிய வருதே என்றவர் பேச்சுக்கு நீங்க சடை முடியோட பேச்ச இப்ப தான் கேக்குறீங்களா?

ஆமா என்று சொன்னதும் சொன்னவர் லேசாகச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறீங்க. ஒண்ணுல்ல அவரு பேசுற மீட்டிங் கேட்டுருக்கிங்களா?

இல்ல…

ரெண்டு கேளுங்க .ஒரே மாதிரி இருக்கும்.

அப்பிடியா?

“ஆமாங்க ரெண்டு மூணு பாட்ட மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிச்சம்னா. மொதல்ல கேக்கும் போது வியப்பா இருக்கும். அடுத்து அடுத்து கேக்கும் போது அலுப்பு தான வரும் என்று இருவர் பேசினர்.

ஒருவர் முறைத்துப் பார்க்க பேசிய இருவரும் அப்படியே வாயடைத்து உட்கார்ந்தனர்.

“பூமாலையே தோள் சேரவா என்ற செல்போனின் ரிங்டோன் அடிக்க பாடலை வைத்தவர் பரபரக்க எடுத்தார். அது ஓயாமல் அடுத்து அடுத்து ஒலிக்க ஆரம்பித்தது. அதான் ஆன்மீக சொற்பொழிவுன்னு தெரியுதில்ல. போன சைலண்ட்ல வைக்க வேண்டியது தான என்றவரின் பேச்சைக் கேட்டு அவர் அப்படியே செல்போனை ஆன் செய்து பேசினார்.

அவர் பேசிய பேச்சு அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

ஏங்க ஒரு மேனரிசம் வேணாம் ;இப்படி பேசிட்டு இருக்காரு.? இவரு பேசுறத கேக்குறதா இல்ல சொற்பொழிவாளர் பேசுற பேச்ச கேக்குறதா? இவ்வளவு சத்தமா பேசிட்டு இருக்காரு என்ற பேச்சைக் கேட்டவர் அப்படியே வெளியே ஓடினார்.

மீண்டும் சொற்பொழிவாளர் தெய்வீகப் பேச்சைத் தொடர்ந்தார். அம்பாள் என்னைய எப்படி வச்சுருக்கா தெரியுமா? ரொம்ப நல்லா இருக்கேன். சொத்து சொகத்துக்கு எந்தக் கொறையுமில்ல நல்லா சாப்பிடுறேன். நல்லாத் தூங்குறேன்: நல்லா வாழ்றேன் என்று நல்லா நல்லா என்று நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார் சடை முடிக்கவிஞன் .

பக்திரசம் சொட்டச் சொட்ட பேசிக் கொண்டிருந்த சடைமுடிக்கவிஞன் ஒரு வழியாக தன் பேச்சை முடித்தார்.

குருஜி எழுந்து போய் அருளாசியும் நன்றியுரையும் வழங்கினார்.

உங்களுக்கு நல்ல சேதி சீக்கிரமே வந்துசேரும். எல்லாரும் கீழ போயி சிற்றுண்டி சாப்பிட்டுட்டு போங்க என்று கூறினார்.

அரங்கம் நாலா பக்கமும் சிதறியது உணவு அரங்கை நோக்கிப் புறப்பட்டது. பக்தர்கள் கூட்டம் சடைமுடிக்கவிஞரும் சிறப்பு விருந்தினரும் மற்றும் பக்தர்களும் சாப்பிட ஆரம்பித்தனர். இடப்பட்ட இலையில் இனிப்புப் பொங்கலை வைத்ததும் ஐயய்யோ, பாத்து சாப்பிடுங்க இவ்வளவு சக்கரை சாப்பிட்டா என்னாகும் சுகர் சர்ன்னு ஏறிரும் என்று சொல்லித் தடுத்தார்.

சடைமுடியின் மனைவி வார்த்தைக்கு வார்த்தை நான், நல்லா இருக்கேன்; நல்லா இருக்கேன் என்று பேசிய கவிஞனின் மனைவி கவிஞனை பருப்பு, எண்ணெய், அப்பளம், ஊறுகாய் என சாப்பிடப் போன அத்தனையும் தடுத்துக் கொண்டிருந்தாள்.

இப்போது அவள் தான் அவருக்கு அம்பாளாகத் தெரிந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *