சிறுகதை

சொந்த வீடு – ராஜா செல்ல முத்து

நாகலிங்கத்திற்கு கோடம்பாக்கத்தில் சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டை வைத்துக் கொண்டு அவர் அடித்துக்கொள்ளும் பெருமை சொல்லால் சொல்லிமாளாது.

இந்த உலகத்தை ஜெயித்து விட்டதாக அந்த ஒற்றை வீட்டை வைத்துக் கொண்டு அவர் பெருமை; தம்பட்டம் அடித்துக் கொள்வார். கீழே நாகலிங்கம் மனைவி கல்யாணமாகாத ஒரு பெண். மேலே மூத்தமகள் கல்யாணமானவள். மருமகளுடன் என்று அந்த ஒற்றை வீடு தான் அவருக்கு இந்த உலகம்.

சுற்றி இருக்கும் வீடுகள் எல்லாம் அவருக்கு சுமார் தான் . தன் வீட்டை தான் அழகாக பராமரிப்பது. பேணிக்காப்பது என்று இருப்பார்.

வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும் நாகலிங்கம்தான் தினந்தோறும் காலை, மாலை என்று வீட்டைக் கூட்டுவது ,தண்ணீர் தெளிப்பது என்று இருப்பார். இத்தனைக்கும் காரணம் அவர் செல்லமாக வளர்க்கிறார் என்று பொருள். அவரின் இந்தச் செயலைப் பார்த்து அந்த வழியாகச் செல்பவர்கள் எல்லாம் நாகலிங்கத்தை திட்டாமல் செல்லமாட்டார்கள்

ஏன் நாகலிங்கம் .? காலையில சாயங்காலம் வீடு, வாசல் கூட்டிட்டு இருக்கியே? நாளைக்கு உன் மகளை கட்டிக் கொடுத்திட்டா என்ன பண்ணுவ? அங்கேயும் போய் நீ தான் வீடு கூட்டுவியா ?என்று சொல்ல.

அதுக்குத்தானே மூத்தப் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை ஒருத்தன கட்டிட்டு வந்துட்டேன். அந்தா அவ மேல இருக்கிறா. நான் தான் கூட்டிட்டு இருக்கேன் என்று நாகலிங்கம் ரொம்ப முறைப்பாக பேசுவார்.

எது எப்படியோ ஆம்பள செய்ற வேலைய ஆம்பள செய்யணும். பொம்பள செய்யுற வேலையை பொம்பள வேலை செய்யணும் என்று அறிவுரை சொல்பவர்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்ய மாட்டார் நாகலிங்கம்

அவரின் எதிர்வீடு, இடப்பக்கம் வலப்பக்கம் என்று அத்தனை பேரும் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் அவர்களெல்லாம் பார்த்தால், ஏதோ புழு பூச்சியை பார்ப்பது போல் பார்ப்பார் நாகலிங்கம்.

இவர் சொந்த வீடு வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் ஆணி அடிக்கலாம்..எப்போது வேண்டுமானாலும் லைட் போடலாம் என்று இறுமாப்பு அவருக்குள் இருந்தது.

அவரின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் ரொம்ப நாளாக வாடகைக்கு வராததால் அந்த வீடு பூட்டியிருந்தது. தற்போது அந்த வீட்டிற்குக் குடி வந்தார்கள்.

நாகலிங்கம் எப்போதும் பாேல, தன்னுடைய வாசலைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுவும் அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தின் இலைகளெல்லாம் உதிர்ந்து கிடக்கும்.

அந்தச் சருகுகளையெல்லாம் கூட்டியவர் எப்போதும் போல எதிர் வீட்டிற்குச் சுவர்ப் பக்கம் தள்ளிக் காெண்டிருந்தார். இதைப்பார்த்தார் புதிதாக வீட்டிற்கு வந்த ராஜேந்திரன்.

என்ன இந்த ஆளு அவனோட வீட்டுக் குப்பையெல்லாம் நம்ம வீட்டுப் பக்கம் தள்ளிட்டு இருக்கான் என்று நினைத்தவர் முதல நாள் எதுவும் சாெல்லாமல் விட்டு விட்டார். மறுநாள் என்ன செய்கிறார் பார்ப்போம் என்ற ராஜேந்திரன், நாகலிங்கம் மாலை நேரம் கூட்டும் நேரம் பார்த்து, வெளியே எட்டிப்பார்த்தார். வேக வேகமாக குப்பைகளைக் கூட்டிய நாகலிங்கம் அதை எதிர் வீட்டுச் சுவரோரம் தள்ளினார். ராஜேந்திரனுக்கு வந்ததே காேபம்.

ஹலோ…என்ன உங்க வீட்டுக் குப்பயெல்லாம் கூட்டி வந்து எங்க வீட்டுல தள்ளுறீங்க. இது நியாயம் இல்ல என்று ராஜேந்திரன் சாெல்ல

இல்ல இது ரொம்ப நாளா நடந்திட்டு இருக்கு. புதுசா சாெல்றிங்க என்று நாகலிங்கம் சொல்ல

இதுக்கு முன்னாடி சரி. இப்ப தான் நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்திட்டமே. அப்பறம் ஏன் இங்க குப்பய காெட்டுற என்று சாெல்ல,

இனிமே கொட்டல என்றவர் மறுபடியும் மறுபடியும் அதே வேலையைச் செய்தார் நாகலிங்கம்.

இதைப் பார்த்துக் காெண்டே இருந்த ராஜேந்திரன் ராெம்பவே நாெந்து சாென்னார். ஏன் சார். நீங்க இருக்கிறது சொந்த வீடா? வாடகைக்கு குடியிருக்கிற எங்கள மாதிரி ஆளுகள பாத்தா உங்களுக்கு கேவலமா இருக்கா. திரும்பத் திரும்ப தப்பு பண்ணிட்டு இருக்கிங்க. இது தப்பு சார்.சொந்த வீடு வச்சிருக்கிறது பெரிய சாதனை இல்லீங்க..நல்ல மனுசனா இருக்கிறது தான் ராெம்ப முக்கியம். இப்ப இருக்கிற சூழல்ல மனுசன மனுசனா மதிங்க. அப்பறம் உங்க சொத்து சுகத்தக் காட்டுங்க என்று தீர்மானமாகச் சாென்னார் ராஜேந்திரன்.

அதிலிருந்து வாசலைக் கூட்டும் பாேது, எதிர் வீட்டுச் சுவர் அருகே குப்பையைத் தள்ளுவதே இல்லை நாகலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *