அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை, ஜன.4-–
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக 16 ஆயிரத்து 932 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வருகிற 15–-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாளை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கூடுதல் ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12–-ந் தேதி முதல் 14–-ந் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,449 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10 ஆயிரத்து 749 பஸ்களும்; மற்ற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 932 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப 16–-ந் தேதி முதல் 18–-ந் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 4,334 சிறப்பு பஸ்களும்; மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 599 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லும். அங்கிருந்து தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னையில் இருந்து பஸ்கள் வெளியேறும் வரை நெரிசல் வராமல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் 12–-ந் தேதி முதல் 14–-ந் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களிலும், தாம்பரம் மெப்சில் ஒரு மையத்திலும், பூந்தமல்லியில் ஒன்றும் என மொத்தம் 12 மையங்களில் முன்பதிவு செய்யப்படும்.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மேலும், வழித்தடங்கள் குறித்து தெரிந்துகொள்ள பஸ் நிலையங்களில் 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. சிறப்பு பஸ்கள் புறப்படும் 4 பஸ் நிலையங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இருந்து 12–-ந் தேதி முதல் 14–-ந் தேதி வரை வெளியூர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் புறப்படும் இடங்கள்:-
* மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் புறப்படும்.
* கே.கே.நகர் மாநகர் போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்படும்.
* தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
* தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.
* திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பஸ்கள்; திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
* பூந்தமல்லி பைபாஸ் சாலை மாநகராட்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்லும் பஸ்கள்; திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள்;
* கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர, மற்ற ஊர்களான மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பஸ்கள் மீது
புகார் தெரிவிக்க வசதி
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில்கள் வருமாறு:-–
முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆம்னி பஸ் கட்டணத்தை குறைத்து கொண்டுள்ளனர். கடந்த தீபாவளி பண்டிகையின்போது தேவையான அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பல்வேறு ஆம்னி பஸ்களுக்கு முழுமையாக பயணிகள் கிடைக்கவில்லை. இப்போதும் அதே நிலைதான் உள்ளது.
மக்களுக்கு தேவையான அளவுக்கு அரசு பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பஸ்களில் மக்கள் நின்று கொண்டே பயணிக்காத அளவுக்கு போதுமான பஸ்களை வழங்குவோம். ஆம்னி பஸ் மீது கூடுதல் கட்டணம் பற்றி புகார் வந்தால் அவர்கள் மீது தயவுதாட்சன்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் அளித்து உள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க பயணிகளுக்கு என்ன அறிவுரைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்குகிறதோ, அதை போக்குவரத்து துறை செயல்படுத்தும்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.