செய்திகள்

சொத்து வரி செலுத்தாத 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்னை மாநகராட்சி சீல்

சென்னை, மார்ச் 25–

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சொத்துவரி செலுத்தாத 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள டிஎல்எப் கமெண்டர்ஸ் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு மொத்தம் 18 தளங்களை கொண்ட குடியிருப்பாகும்.

இதில் 385 வீடுகள் உள்ளன. இதில் 70 வீடுகள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கான சொத்துவரியும் சேர்த்து 9 லட்சத்து 72 ஆயிரத்து 143 ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்று முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 70 அடுக்குமாடி குடியிருப்புகளை பூட்டி சீல் வைத்தனர். இதில் ஒரு சிலர் சொத்துவரி செலுத்தி இருப்பதால் குடியிருப்பின் ஒரு வாசல் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வாசல் பூட்டி சீல் வைக்கப்பட்டு அதில் மாநகராட்சி அதிகாரிகள் பேனர் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை

மேலும் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாத குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர், சீல் வைக்கும் பணி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அடுத்த மாதம் முதல் ஏரியா சபைகளை நடத்த வேண்டும் என்றும் அக்கூட்டங்களில் சொத்துவரி செலுத்தாதோர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பதவிகள் உள்ளன. வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளை தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

வார்டு கமிட்டி கூட்டம்

அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளது. கமிட்டியின் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதத்துக்கு ஒரு முறை அவரது தலைமையில் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக அரசு விதிகளை வகுத்திருக்கிறது.

அரசின் அறிவிப்பின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 10 ஏரியா சபைகள் என 2 ஆயிரம் ஏரியா சபைகள் அமைக்கப்பட உள்ளது. இவை அனைத்துக்கும், தொடர்புடைய வார்டு கவுன்சிலர் தலைவராகவும், வார்டு உதவி பொறியாளர் செயலராகவும் இருப்பார்கள்.

ஏரியா சபை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் அவர் பேசும்போது, “ஏப்ரல் முதல் ஏரியா சபை கூட்டங்களை நடத்துங்கள். அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், வளர்ச்சிப் பணிகள், சொத்து வரி செலுத்தாதோர் விவரங்களை பார்வைக்கு வைக்க வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *