செய்திகள்

சொத்து தகராறு; முன்னாள் எம்.பி.யின் மனைவி குத்திக் கொலை: தப்பி ஓடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை, ஏப். 15–

சொத்து பிரச்சினை காரணமாக தாயை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முன்னாள் எம்.பி.யின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. இவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தார். மேலும் இவர் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவரது மனைவி ரத்தினம். சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு இறந்து விட்டதால் ரத்தினம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவர்களது மகன் பிரவீன் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீட்டுக்கு வந்த அவரது உறவினர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ரத்தினம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சொத்துப் பிரச்சினை காரணமாக ரத்தினத்தின் மகன் பிரவீன் இங்கிலாந்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழகம் வந்துள்ளார். சொத்துகளை பிரிப்பதில் தாய்க்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரவீன் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தப்பி ஓடிய பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *