மதுரை, நவ. 2
ஐகோர்ட் உத்தரவுக்கு பின்பும் சொத்து ஆவணங்களை பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள்சாமி, ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்து தரும்படி திண்டுக்கல் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் அவற்றை பதிய மறுத்து சார்-பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், சார்-பதிவாளர் உத்தரவை ரத்து செய்தது. ஒரு வாரத்தில் இந்த சொத்து பத்திரங்களை பதிவு செய்து தரவேண்டும் என சார்-பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி நாங்கள் மீண்டும் பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்தோம். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்பும் சொத்து பத்திரத்தை பதிய மறுக்கின்றனர். எனவே இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, ஐகோர்ட் உத்தரவை சார்-பதிவாளர் பின்பற்றாதது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என வாதாடினர். இதையடுத்து நீதிபதி, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் மீது அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி நீதிபதி முன்பு திண்டுக்கல் சார்-பதிவாளர் நேரில் ஆஜரானார்.
விசாரணை முடிவில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் சார்-பதிவாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சுற்றுச்சூழல்துறைக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.