செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதாவின் விலைஉயர்ந்த புடவைகள், பொருட்கள் ஏலம்

கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு, ஜன. 25–

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம்விட, கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரன் ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு பொங்களூரு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் 2017-ம் ஆண்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் சிறை தண்டனை பெற்றனர்.

ஏலம் விட உத்தரவு

தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் வீட்டிலிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த பெங்களூரு சிவில் நீதிமன்றம், ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள், சால்வைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *