சிறுகதை

சொக்கத்தங்கம் | ஆவடி ரமேஷ்குமார்

பெங்களூருக்கு ஓடிப்போயிருந்த அக்‌சராவும் பிரபுவும் இருபது நாட்களுக்கு பின் சென்னை திரும்பியிருந்தார்கள்.

சென்ட்ரலிலிருந்து வெளியேறி அவரவர் வீடுகளுக்கு செல்ல தனி தனியாக ஆட்டோ பிடித்தனர்.

அக்‌சராவின் வீடு. வந்த மகளை பார்க்க விரும்பாமல் தலையை குனிந்து கொண்டார் வெங்கடாசலம்.

அரைமணி நேரம் கழித்து கட்டிலில் படுத்திருந்த அக்‌சராவை நெருங்கி நின்றார் வெங்கடாசலம்.

” இப்படி பண்ணிட்டியே அக்‌சரா…ஊரே நாறிப்போச்சு! உன் வயசென்ன. அந்த பிரபு வயசென்ன…டியூசன் படிக்க வந்த அவனைப்போய் உன் உடம்பு சுகத்துக்காக…”

” அப்பா!” என்று கத்தியபடி எழுந்து அமர்ந்தாள் அக்‌சரா.

” ஏன் இப்படி கத்தறே? தப்பு பண்ணிட்டு வந்தவ இந்த கத்து கத்தலாமா?”” அப்பா வேண்டாம்! நான் எம்.காம்.,எம்.எட்.,படிச்ச ஒரு டீச்சர்.எங்களுக்குள்ள என்ன நடத்ததுங்கிறது தெரியாம தப்புத்தப்பா நேர்ல பார்த்த மாதிரி பேசக்கூடாது.

அப்புறம் நான் அப்பானு கூட பார்க்கமாட்டேன்!”

” வேணும் வேணும் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!”

” எல்லாம் உங்களாலயும் அந்த பிரபுவோட அப்பனாலயும் தான் நாங்க இப்படி ஓடிப்போனோம்!”

” என்ன அக்‌சரா சொல்ற?”

” ம்..சொரக்காய்க்கு உப்பு இல்லேனு சொல்றன்”

” அக்‌சரா.. வாய் நீளுது”

” பின்ன என்னப்பா…என் வயசு 28.பிரபுவோட அப்பன் வயசு 58.எனக்கு பிடிக்கலனு தெரிஞ்சும் அந்தாளுக்கு போய் என்னை ரெண்டாம் தாரமா கட்டி வைக்க பார்த்தீங்களே…இது மட்டும் நியாயமா?”

” தப்பு தான். நான் என்ன பண்றது? உன் அக்காளுக ரெண்டு பேர் கல்யாணத்துக்கு அந்தாளுகிட்ட வாங்கின அஞ்சு லட்சம் கடனை அடைக்க முடியல. அந்தாளு என்னை மாதிரி பொண்டாட்டியை இழந்தவன். ஆனா என்னை மாதிரி அடங்கி சும்மா இருந்தானா… காசு உள்ளவன்! உன் அழகை பார்த்தான்; வயசை பார்த்தான்; ஆசைப்பட்டுட்டான். விட்டா உன் கல்யாணத்துக்கும் நான் கடன் கேட்டுருவேன்னு என்னை முந்திக்கிட்டான்.

‘ அஞ்சு லட்சம் வேண்டாம்; அக்‌சராவை எனக்கு கட்டிக்குடு; ராணி மாதிரி வச்சுக்கிறேன்’னான்.எனக்கு கடனை அடைக்க வேற வழி தெரியலைம்மா.உன்னை தியாகம் பண்றதுனு நான் முடிவு பண்ணினது தப்புதாம்மா.பேசாம நான் தூக்கு போட்டு செத்திருந்தா இந்த கண்றாவி நடந்திருக்குமா?”

” ம்…இப்ப வெவரமா பேசுங்க.செத்திருக்க வேண்டியது தானே? சக்திக்கு மீறி கடன் வாங்கி கல்யாணம் பண்ணி வச்சது யார் தப்பு? நான் தான் அதுக்கு பலிகடாவா? இல்ல என் நெத்தியில ‘ இளிச்சவாச்சி’னு ஏதாவது எழுதியிருக்கா?”

” சரி.மானம் போயாச்சு.விடும்மா. இனி பேசி என்ன பிரயோசனம்? அந்தப் பையன் இப்ப எங்க?”

” அவன், அவங்க வீட்டுக்கு போயிட்டான்”” இருபது நாள்ல ஆசை தீர்ந்திடுச்சா? கர்மம் புடிச்ச பையன்! அவங்கப்பன் புத்தி அவனுக்கும்.என்ன அவங்கப்பன் இருபத்தெட்டு வயசு பொண்ணான உன்னை தேடினான். இவன் பத்து வயசு தன்னைவிட பெரியவளா அதுவும் டீச்சரா பார்த்து தேடியிருக்கான். நீயும் சிக்கீட்ட. மொத்தத்துல ரெண்டு நாய்களும் என் பொண்ணு வாழ்க்கைல விளையாடிடிச்சு”

” அப்பா… அவங்கப்பனை வேணா திட்டுங்க. நியாயம். இவனை திட்டாதீங்க. இவன் தங்கமான பையன்!”

” க்கும். பிரபு உன் ஆசைக்கு ஈடு கொடுத்து ஊரைவிட்டு ஓடி வந்ததுக்கு சர்ட்டிபிகேட்டா? அவன் ஒரு தகரம். அவனைப்போய் தங்கமான பையன்கிறியே… அடச்சீ! டியூசன் சொல்லிக்கொடுத்த டீச்சர் மேல ஆசைப்பட்டவன் தானே அவன்?”

” ம்.இனி நான் உங்களுக்கே டீச்சர் ஆகி பாடம் நடத்தறதை தவிர வேற வழியில்ல. அப்பா..பிரபு உண்மையிலேயே தங்கம் தான். அவன் என் கூடப்பிறக்காத தம்பிப்பா!” என்ற அக்‌சரா, குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக வெங்கடாசலத்துக்கு புரியும்படி பேச ஆரம்பித்தாள்.

” அப்பா… நீங்களும் பிரபுவோட அப்பாவும் எனக்கெதிரா போட்ட திட்டத்தை என்னால சமாளிக்க முடியல. என்கிட்ட பி.காம்க்கு டியூசன் படிச்சிட்டு வந்த பதினெட்டு வயசு பிரபுகிட்ட, அவங்கப்பா என்னை அடையறதுக்காக போட்டிருந்த ‘ நல்லவர்’ வேஷத்தை எடுத்துச்சொன்னேன்.

அவனும் போய் அவங்கப்பாகிட்ட ‘ இது தப்புப்பா’ னு புரிய வைக்க முயற்சி பண்ணியிருக்கான்.

அந்தாளுக்கு என் மேல கிறுக்கு. அதனால அவர், ‘ நீ டியூசனுக்கே போக வேண்டாம்; அக்‌சராவை உன் சித்தியா மாத்திக் காட்டறேன்; பிறகு நம்ம வீட்லயே படிச்சிக்கோ’ னு டியூசனை விட்டு நிறுத்திட்டார்…….. பிரபு இதை என்கிட்ட வந்து சொல்லிட்டு, ‘ மேடம், எங்கப்பா உங்களை வெறுக்கனும்னா நீங்களும் நானும் ஒரு இருபது நாள் எங்கேயாவது ஓடிப்போகிற மாதிரி நாடகமாடனும். முடியுமா…சம்மதமா’ னு கேட்டான்….. ரெண்டு நாள் யோசிச்சேன்.

உங்க தொல்லை தாங்க முடியாமத்தான் நான் அவன் திட்டத்துக்கு சம்மதிச்சேன். மத்தபடி அவன் என் மதிப்பு மிக்க மாணவன்! இதுல இன்னொரு விஷயம் இருக்குப்பா. பெங்களூருக்கு அவன் தான் என்னை கூட்டிட்டு போனான். அங்க ஒரு கல்லூரி முதல்வர் வீட்ல தான் என்னை தங்க வச்சான். அவரு இவனோட ப்ரண்டோட ரிலேசனாம்…… அந்த முதல்வருக்கு ஒரு மகன். வயசு 35 இருக்கும். பேச்சிலர்.எதிர்பார்த்த பெண் அமையலயாம். அவரும் காலேஜ்ல லெக்சரரா ஒர்க் பண்றார். அவர் என் கதையை கேட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா சொல்லியிருக்கார். எனக்கும் அவரை பிடிச்சிருக்கு…… நாங்க நினைச்சி போனது ஒண்ணு. நடந்தது வேற ஒண்ணு.

உங்க கடன் அஞ்சு லட்சத்தை அந்த கல்லூரி முதல்வரே அடைச்சிடறேன்னுட்டார். இதுக்கெல்லாம் பிரபு தான் ஐடியா கொடுத்தான். இப்ப சொல்லுங்க,பிரபு… தங்கமா தகரமா?”

” தப்பும்மா தப்பு. நான் சொன்னது தப்பு. பிரபு ஒரு சொக்கத்தங்கம்!” என்றார் வெங்கடாசலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *