சிறுகதை

சைலண்ட் – ராஜா செல்லமுத்து

ஜெயபிரகாஷுக்கு நகரத்தில் இரண்டு, மூன்று பெரிய கம்பெனிகள் இருந்தன . ஒவ்வொரு கம்பெனியிலும் சுமார் 100 பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜெயபிரகாஷ் மூன்று கம்பெனிகளுக்கும் போய் அங்கு நடக்கும் வேலைகள். பணியாளர்கள் என்று அவர்களின் நிறைகள், குறைகள் எல்லாவற்றையும் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வார் .

அவர் ஒரு கம்பெனியின் முதலாளி என்றோ இல்லை இவ்வளவு கோடிகளுக்கு அதிபதி என்றோ அவர் ஒரு முறையும் தன் தலையில் தூக்கி அந்த பாரத்தை வைத்துக் கொள்வதே இல்லை. அதனால்தான் அவர் மற்றவர்களிடம் பழகும் போது ரொம்பவே எளிமையாக பேசுவார். அவரை அணுகுவது பேசுவதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. உதவி என்று கேட்டால் அல்லது யாருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை ஓடிப்போய் செய்யும் குணம் கொண்டவர் ஜெயபிரகாஷ்.

அதனால் தானோ என்னவோ அவர் ஒரே எளிமையின் ஏணி என்று அவர் வேலை செய்யும் பணியாளர்கள் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் மிகவும் சாதாரண நிலையிலிருந்து முன்னுக்கு வந்தவர் தான். அதனால்தான் அவர் மற்றவர்களை மனிதனாக மதிக்கும் அன்பையும் பண்பையும் வைத்திருந்தார் .

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் அவருக்கு அலுவலகம் தவிர்த்து தனியாக ஒரு பர்சனல் அலுவலகம் உண்டு. அதில் முன்பதிவு செய்து கொள்பவர்கள் .அவரைப் பார்த்து உதவி கேட்பவர்கள் என்று அந்த அலுவலகத்தை வைத்திருந்தார். அலுவலக ஊழியர்கள் தாண்டி பொதுமக்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று உதவிகள் கேட்டால் அதை தாராளமாக செய்யவும் முன்கூட்டியே தெரியப்படுத்துவதற்காக அந்த அலுவலகத்தை வைத்திருந்தார்.

அந்த அலுவலகத்திற்கு ஒரு பெண்ணையும் பொறுப்பாக போட்டு வைத்திருந்தார். அலுவலகத்திற்கு வரும் நபர்களை விசாரிப்பது. அவர்கள் கொடுக்கும் கோரிக்கைகள் மனுக்கள் எல்லாவற்றையும் வாங்கி அதை ஜெயபிரகாஷ் இடம் கொடுப்பது வரும் தொலைபேசி அழைப்புகளில் சொல்வது. யார் யார் பேசினார்கள் என்ற விவரங்கள் எல்லாம் சொல்வதற்காகத்தான் அந்த தனி அலுவலகத்தை வைத்திருந்தார் ஜெயபிரகாஷ்.

நல்ல முறையில் தான் அவர் தனி அலுவலகம் நடந்துகொண்டிருந்தது. சில நாட்களாக ஜெயபிரகாஷ் பற்றிய தவறான எண்ணங்கள் வர ஆரம்பித்திருந்தன. இது ஜெயப்பிரகாஷின் காதுகளுக்கு போய் எட்டவே இல்லை.

என்னங்க முன்னெல்லாம் ஜெயபிரகாஷ் ஏதாவது உதவி செய்யணும்னா நாம நினைக்கிற நாளுக்கு முன்னாடியே அவங்க ஆளுக கொண்டுவந்து நமக்கு உதவி பண்ணிருவாங்க. ஆனா இப்போ அவங்க ஆபீஸ்ல இருந்து எந்த பதிலும் வாரதில்லை . ஏதாவது கோரிக்கை மனு குடுத்த நாம அவருடைய அலுவலகத்துக்கு போனா இரண்டு நாள் முன்னால் ஏன் சில நேரங்களில் பத்து நாள் கழிச்சு கூட பேச சொல்லுவாங்க. நாம அவங்க அலுவலக நம்பருக்கு போட்டா அதை எடுத்து பதில் சொல்வதே இல்லை. நம்முடைய வலியும் வேதனையும் ஜெயபிரகாஷ் இப்போ தெரியறதில்ல என்று ஒருவர் சொல்ல

எல்லாம் அப்படித்தாங்க பணம் வருவது வரைக்கும்தான் இப்படியும் இருப்பாங்க . பணம் வந்துட்டா எல்லாம் வேலையைக் காட்டுவாங்க ஜெயப்பிரகாஷ் மட்டும் என்ன விதிவிலக்கா?

அவரு முன்ன மாதிரி இல்லையே இப்போ பெரிய பணக்காரனாகிட்டாேரே அதுதான் இந்த மாதிரி நடந்துக்கிறார் என்று அவரிடம் நன்மை பெற்றவர்கள் தற்போது தவறாக பேச ஆரம்பித்தார்கள் .

அதிலிருந்து சிலர் உதவி கேட்டு வருவது இல்லை. அவரை சிபாரிசு செய்வதில்லை . காரணம் அவர் அலுவலக தொலைபேசி எண்ணை யாரும் எடுப்பதில்லை . அதற்கு முறையாக பதில் சொல்லவில்லை என்பது தான் அவர்களுக்கு ஆதாரச் சுருதியாக இருந்தது. இது தெரியாத ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல அவர் எல்லா நன்மைகளையும் செய்து கொண்டிருந்தார் .

ஒரு சிலர் தன்னை தவறாக பேசுவது அவர் காதுகளுக்கு போய்விட்டது. எவர் இன்னாரென்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்காக தன்னை தவறாக பேசுகிறார்கள் . அதற்கு என்ன காரணம் ?என்பதை அவரால் உணர முடியவில்லை.

அவர் எப்போதும் தன்னுடைய தனி அலுவலகத்திற்கு நிலைபேசி எண்ணை அவர் அழைத்ததே இல்லை . அன்று ஒரு நாள் திடீரென தான் வேலைக்கு அமர்த்திய என்னை கூப்பிடலாம் என்று அவளின் கைபேசியை விட்டுவிட்டு நிலை பேசிக்கு அழைத்தார்.

தான் வேலைக்கு அமர்த்திய பின் அந்த நிலை பேசியை எடுக்கவே இல்லை . மாறி மாறி அந்த நிலை பேசிக்கு அடித்துக் கொண்டே இருந்தார் .எடுக்கவில்லை. வந்தது கோபம் ஜெயபிரகாஷ்.

நேராக தன்னுடைய தனி அலுவலகத்திற்கு சென்றார். அங்கே சென்றால் அந்த நிலை பேசியை சைலன்ட் மோடில் வைத்து விட்டு தான் வேலைக்கு அமர்த்திய பெண் ஹாயாக ஒரு ஆண்மகனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

தன் அலுவலகத்திற்கு சென்றது கூட தெரியாமல் அந்தப் பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பதை அவர் அறிந்து கோபம் கொண்டார்.

நான் போன் பண்ணேன் ஏன் எடுக்கல ? என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார்.

இல்ல சார் போன் வரல என்று மொட்டையாக பதில் சொன்னாள். அந்தப் பெண்மணி.

இல்லையே நான் போன் பண்ணினேன் என்று ஜெயபிரகாஷ் சொல்ல

போன் வரல சார் என்று பிடிவாதமாக சொன்னாள் அந்த பெண்

அங்கிருந்தபடியே தன் கைபேசியில் இருந்து நிலைபேசிக்கு போன் செய்தார் எட்டூருக்கு கேட்கும் அந்த நிலைபேசிச் சத்தம் கொஞ்சம் கூட வெளிவராமல் இருந்தது. அந்தப்பெண் திடுக்கிட்டுப் போனாள்.

ஓ இதுதான் காரணமா? அப்போ எனக்காக பேசுற எந்த போனையும் நீ எடுக்கறதில்ல. இந்த நிலை பேசிய சைலன்ட் மோடில் வச்சிட்டு உனக்கு தேவைப்பட்டவங்க கூட பேசிகிட்டு இருக்க. அப்படித்தானே என்று வெளுத்து வாங்கினார்.

அந்தப் பெண்மணி அந்தப்பெண் செய்வதறியாது திகைத்தாள்.

வெளியில் இருக்கிறவங்க என்னை பற்றி தப்பா பேசுறதுக்கு நீ தான் காரணம் . என்ன நான் எப்போவும் போலதான் இருக்கேன். உங்கள மாதிரி ஆளுக தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறவங்க தவறான பேர் வாங்கி கொடுக்கிறாங்க. சரியான நேரத்திற்கு சரியான நபர்களுக்கு சரியான பதில் சொன்னால் அதனால எனக்கு இவ்வளவு கெட்ட பேரு தெரியுமா? பாதிக்கப்பட்டவங்க என்னோட அலுவலகத்தில் வேலை செய்ற பொண்ணு தொலைபேசிய சைலன்ட் மோடில் வச்சிருக்குன்னு அவங்களுக்குத் தெரியுமா? ஜெயபிரகாஷ் ஏமாத்துறாரு. போன் பண்ணா அவங்க அலுவலகத்தில எடுக்கிறதில்லை. இப்படித்தான் கெட்ட பேரு வரும். அதுக்கு நீ தான காரணம். ஒண்ணுமே செய்யல அப்படி என்ற எண்ணமும் என்னைப் பற்றிய தவறான புரிதலும் அவங்களுக்கு வரதுக்கு காரணமே நீ தான். இனிமே இந்த அலுவலகத்தில் நீ ஒன்னும் இருக்க வேணாம் என்று சொல்லி அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கினார்.

அப்போது சைலன்ட் மோடில் இருந்த நிலைபேசி உறங்கி கொண்டிருக்கும் ஊரை எழும்பி உட்கார வைக்கும் அளவிற்கு அந்த சத்தம் கேட்டது .

எத்தனை நாள் பேசாமல் இருந்ததோ ?அந்த நிலைபேசி இப்பொழுதுதான் விடுதலைபெற்று வாய் பேச ஆரம்பித்தது.

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

என்ற சத்தம் பிறந்த குழந்தையைப் போல அந்த நிலைபேசியில் இருந்து வந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *