செய்திகள்

சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழக கிரிக்கெட் அணி

பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி

சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழக கிரிக்கெட் அணி

ஆமதாபாத், பிப். 1–

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக் -அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களை குவித்தது. அந்த அணிக்காக விஷ்ணு சொலங்கி 49 ரன்களை எடுத்திருந்தார்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமிழக அணி பேட்டிங் செய்தது. ஜெகதீசன் 14 ரன்களும், ஹரி நிஷாந்த் 35 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழந்தனர். லுக்மன் மெரிவாலா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஷாருக்கான் வெற்றியை உறுதி செய்தார். 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித் 29 ரன்களுடனும், ஷாருக்கான் 18 ரன்களுடனும் அவுட்டாகமல் இருந்தனர்.4 விக்கெட்டுகள் எடுத்த மணிமாறன் சித்தார்த் ஆட்டநாயகன் பட்டத்தை வென்றார்.

இதன்மூலம் தமிழக அணி 2வது முறையாக (2006–-07, 2020-–21) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுதவிர, இத்தொடரில் குஜராத், கர்நாடகா, பரோடா ஆகிய அணிகளுடன் தற்போது தமிழக அணியும் 2 முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தினேஷ் கார்த்திக் பெருமிதம்

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

கடந்த வருடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மிகவும் மனவேதனையாக இருந்தது.. இந்த வருடம் நாக் அவுட்டில் தகுதி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்து தொடர்ந்து நன்றாக விளையாடினோம். கடந்த வருடம் எங்கள் அணியில் விளையாடிய தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணிக்கு சென்றதால் இந்த வருடம் விளையாட முடியவில்லை. இருந்த போதிலும் அணியில் உள்ள சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் அடுத்தக் கட்டத்துக்குச் செல்வார்கள். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்கிற ஆசையினால் மாநில அணியில் நன்றாக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இந்தப் பெரிய மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அபாரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாய் கிஷோர் அசத்தல்

தமிழக அணியில் இடம்பெற்றுள்ள இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர், இப்போட்டியில் மிகக்குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியுள்ளார். பவர்பிளே ஓவர்களில் இவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து அதிக ரன்களை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி – 4.82. நாக் அவுட் ஆட்டங்களில் எதிரணி வீரர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறடித்தார் சாய் கிஷோர். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள சாய் கிஷோர் 2 வருடங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *