செய்திகள்

சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி கல்லூரி பேராசிரியையிடம் ரூ.38 லட்சம் மோசடி

Makkal Kural Official

ஆவடி, டிச.26-–

மும்பை சைபர் கிரைமில் இருந்து அழைப்பதாகக் கூறி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் வசிப்பவர் ஜெனட் டெய்சி (வயது 62). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி இவரது செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், “நாங்கள் மும்பை சைபர் கிரைம் போலீஸ், உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. உங்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

அதனை ஆர்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முறையானது தானா? அல்லது மோசடியான பணமா? என்பதை கண்டுபிடிப்பார்கள். நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் உங்களது பணத்தை அனுப்ப வேண்டும்” என்று மிரட்டினர்.

இதனால் பயந்துபோன ஜெனட் டெய்சி, மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு சிறிது சிறிதாக மொத்தம் ரூ.38 லட்சத்து 16 ஆயிரத்து 971 பணத்தை அனுப்பினார். ஆனால் அதன்பிறகு அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதன்பிறகுதான் மர்மநபர்கள் நூதன முறையில் தன்னிடம் பணத்தை மோசடி செய்துவிட்டதை அறிந்தார்.

இதுபற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜெனட் டெய்சி புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சென்னை அண்ணா நகர் பகுதியில் பதுங்கி இருந்த பிஜாய் (33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், 12ம் வகுப்பு வரை படித்துள்ள பிஜாய், வேலை கிடைக்காமல், ஆன்லைன் வாயிலாக மோசடி செய்வோருடன் கூட்டு சேர்ந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்காக, 13 வங்கிகளில் கணக்கு துவங்கி, சி.பி.ஐ., அதிகாரி, மும்பை சைபர் கிரைம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரி என கூறி, பலரை ஏமாற்றியுள்ளார்.

மேலும், ஆன்லைன் பங்குச் சந்தை மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தை, வெளிநாடுகளில் ‘கிரிப்டோ கரன்சி’யாக மாற்றி, மோசடி செய்து வந்துள்ளார்.

அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, இந்தியா முழுதும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மோசடிக்காக பயன்படுத்திய மொபைல் போன், லேப்டாப், ஒன்பது டெபிட் கார்டுகள், நான்கு வெல்கம் கிட், இரண்டு பாஸ்புக் மற்றும் ஒன்பது செக் புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *