செய்திகள்

சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் தகனம்: கவர்னர், மு.க.ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

Makkal Kural Official

சென்னை, பிப்.14-–

சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. கவர்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவர் இமாசலபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். கடந்த 4-ந் தேதி அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் வெற்றி மாயமானார். அவரது உடல் 8 நாட்களுக்கு பின்னர் சட்லஜ் நதியில் பாறைகளுக்கு அடியில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கவர்னர், முதலமைச்சர் அஞ்சலி

அதன் பின்னர் உடல் நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், கவிஞர் வைரமுத்து, நடிகர் விதார்த், திரைப்பட இயக்குனர்கள் பாக்யராஜ், பாண்டியராஜன், தங்கர் பச்சான், அமீர், நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட திரைப்பட துறையினரும், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே வர முடியவில்லை. பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சார்பில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நேற்று இரவு 8.20 மணிக்கு மேல் சென்னை நந்தனத்தில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் இருந்து வெற்றியின் உடல் தகனம் செய்வதற்காக தியாகராயநகரில் உள்ள கண்ணாம்மாபேட்டை மயான பூமிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, வெற்றியின் சிதைக்கு சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் தீ மூட்டினான்.

உயர் பதவிகளில் மகன்,

மகள்கள் உள்ளனர்

தகன சடங்குகள் நிறைவடைந்த நிலையில் மயானத்திற்கு முன்பு திரண்டு இருந்த ஆதரவாளர்கள், முன்னிலையில், சைதை துரைசாமி பேசியதாவது:-

வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதி. போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த முறை இது கடைசி என்று சொல்லி சென்றான். அது அவனுக்கு கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒரு காலமும் நினைக்கவில்லை. இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்ற மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளார்கள்.

எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மனம் கலங்கமாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.

ஆகவே, நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்து, என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரை கொண்டு அந்த பாதையில் நான் பயணிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *