புதுடெல்லி, மே.15-
சேவை குறைபாட்டுக்காக நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
வக்கீல்கள் அளிக்கும் சேவை, 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வரும் என்றும், அதனால் சேவை குறைபாடு இருந்தால், வக்கீல்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும் கடந்த 2007ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சங்கங்களும், சில தனிநபர்களும் மேல்முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில், கடந்த 2009ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மிதால் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முக்கிய தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில் கூறியிருப்பதாவது:-
நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறையற்ற வியாபார முறைகளில் இருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழில் வல்லுனர்களையோ, அவர்கள் அளிக்கும் சேவையையோ அந்த சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வருவது நாடாளுமன்றத்தின் நோக்கம் அல்ல.
வக்கீல் பணி தனித்துவமானது. அவர்களது பணியின் தன்மை சிறப்பானது. அது வர்த்தக நோக்கம் கொண்டது அல்ல, சேவை அடிப்படையிலானது. அதை மற்ற தொழில்களுடன் ஒப்பிட முடியாது.
வக்கீல்களிடம் பெறப்படும் சேவை, தனிநபர் சேவைக்கான ஒப்பந்தத்தின்கீழ் வரும் சேவை ஆகும். அதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ‘சேவை’ என்ற வரம்புக்குள் கொண்டுவர முடியாது.
மேலும், வக்கீல்கள் சேவை அளிப்பதை போலவே வாடிக்கையாளரும் அந்த பிரச்சினையில் நேரடி கட்டுப்பாட்டை செலுத்துகிறார்.
எனவே, சேவை குறைபாடு என்ற காரணத்துக்காக வக்கீல்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்புக்குள் வக்கீல்கள் வர மாட்டார்கள். எல்லா தொழில் வல்லுனர்களையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வந்தால், வழக்குகள் குவிந்துவிடும்.
வக்கீல்களுக்கு எதிரான இந்த புகார், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விசாரிக்க முகாந்திரம் இல்லாதது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.