சிறுகதை

சேவை எனும் போதை – ராஜா செல்லமுத்து

மிட்லண்ட் ஓட்டலில் ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இது எதற்கு? என்று வெளியிலிலிருந்து வருபவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இதைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் வெளியில் சொல்வதுமில்லை

அன்றும் கட்டுக்கடங்காத கூட்டம் மிட்லண்ட் ஓட்டல் முன்னால் நின்று கொண்டிருந்தது.

வெளியில் இருந்து சாப்பிட வருபவர்களுக்குக் கூட அவர்கள் இடம் கொடுக்கவில்லை .புதிதாக அந்த ஓட்டலுக்கு வருபவர்களுக்கு விளங்காமல் இருந்தது .

ஆனால் அதைப் பற்றிய விவரத்தை அங்கிருந்தவர்கள் சொல்லாமல் இருந்தார்கள். ஏனென்றால் இவர்களும் நம்முடன் சேர்ந்து கொள்ளக் கூடும். அப்படி என்றால் அடுத்த முறை கூட்டம் அதிகமாகிவிடும் என்று அதை சொல்லாமல் இருந்தார்கள்.

ஏற்கனவே கூடி நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கடை வேண்டாம் .வேற கடைக்கு செல்லலாம் என்று மிட்லண்ட் ஓட்டலை விட்டு வேறு கடைக்குச் சென்றார்கள்.

ஆனால் எதற்காக மிட்லண்ட் ஓட்டலில் இவ்வளவு கூட்டம் நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கே அப்படி என்னதான் சுவை இருக்கிறது? என்று புதிதாக வந்தவர்கள் அருகில் இருக்கும் கடையில் கேட்டார்கள். அவர்களும் சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார்கள்

மிட்லண்ட் ஓட்டலில் கூடியிருந்த கூட்டம் சர சர சரவென உள்ளே நுழைந்தார்கள். எதிர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னதென்று புரியாமல் இருந்தது.

ஆனால் எதிர் ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கு புரிந்தது .புதிதாக சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் புரியாமல் இருந்தது. அதை ஒருவர் விவரமாக கேட்டார்.

அவர் சொன்னதை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்

அடடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா நானும் அந்த ஓட்டல்லயே சாப்பிட்டு இருப்பேனே என்று வருத்தம் கொண்டார்.

அப்படி என்னதான் அந்த ஓட்டல்ல விசேஷம்? என்று இன்னொருவர் கேட்டபோது

அந்த கூட்டத்திற்கான உண்மையை உடைத்தார் அந்தக் கடைக்காரர்.

மிட்லண்ட் ஓட்டலுக்கு அடிக்கடி ஒரு பெரியவர் வருவார். அவர் சாப்பிடுவார். அவர் கூட ரெண்டு மூணு பேர் வருவாங்க .அவங்களும் சாப்பிடுவாங்க; அவர் சாப்பிட்டு இருக்கும் போது ,அந்த ஓட்டல்ல எத்தனை பேரு சாப்பிடுறாங்களோ அத்தனை பேருக்கும் அவர்தான் பில் கொடுப்பாரு. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க ,பணக்காரன், ஏழை இப்படி எந்த பாகுபாடும் அவர் பாக்கிறது இல்ல. அவர் சாப்பிடுற நேரம் அந்த ஓட்டல்ல யார் யார் எவ்வளவு சாப்பிட்டுறாங்களோ ?அவ்வளவு தொகையும் அந்த பெரியவரே தான் குடுப்பார். இது தெரிஞ்சிக்கிட்டவங்க தான் அந்த பெரியவர் எப்ப இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருவாருன்னு பார்த்து அத்தனை பேரும் சாப்பிட வந்துடுறாங்க. இத ஓட்டல் காரங்களும் பெருசா எடுத்துக்கறது இல்ல . ஏன்னா யார் வந்து சாப்பிட்டாலும் பெரியவர் தான் பணம் கொடுக்கப் போறாரு. அதுவும் தெரியாத ஆளுக வந்தா பணம் கொடுக்கத் பாேறாங்க.

ஆனா இவங்க அப்படி இல்ல சாப்பிடுறதுக்குனே வர்றவங்க. . அதுதான் அந்த ஓட்டல்ல இப்படி ஒரு கூட்டம் என்ற ஓட்டல் முதலாளி சொன்ன போது

இது தப்பாச்சே . மனுஷன சோம்பேறியாக்குற விஷயம்ஆச்சே இது. சேவை நல்லது அப்படிங்கறது உண்மை. ஆனா ஒருத்தவங்களுக்கு ஒரு முறை தான் செய்யணும். அத அவைன் பிடிச்சுட்டு மேல ஏறி அடுத்த எடத்துக்கு போயிடனும். அத விட்டுட்டு யாராவது ஒருத்தவங்க நமக்கு செய்வாங்க அப்படின்னு அத பிடிச்சு தாெங்கிட்டு இருக்கிறது அசிங்கம், அவமானம் வெட்கம், கேவலம் . அந்தப் பெரியவர் இத சரிப்படுத்திட்டா நல்லதுன்னு நினைக்கிறேன் என்று ஒருவர் சாென்ன போது

அன்று பெரியவர் சாப்பிட்டு முடித்து பில்லைக் கொடுக்கப் போனார் .

அவருடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அத்தனை பேர்களும் வகையாகச் சாப்பிட்டு விட்டு ,கையில் பார்சலும் வாங்கி வைத்திருந்தார்கள்.

ஆனால் அந்த பெரியவர் அன்று அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பில்லைக் கொடுத்தார். மற்றவர்களுக்கெல்லாம் பில்லை கொடுக்கவில்லை.

ஐயா எப்பவுமே நீங்க தான இவங்களுக்கு பில்லு கொடுப்பீங்க? இன்னைக்கு ஏன் கொடுக்கல என்று கேட்டபோது

நான் ஒவ்வொரு முறையும் இங்க சாப்பிடும்போது வேற வேற ஆளுங்க சாப்பிட்டுட்டு இருந்தாங்க. நான் பில்லு குடுத்தேன். ஆனா சில நாட்களாக ஒரே ஆளுக வந்து சாப்பிடுற மாதிரி எனக்கு புகார் வந்தது அதைத்தான் நான் கண்டுபிடிச்சேன்.

இனிமே அடிக்கடி வாரவங்களுக்கு பில்லு கிடையாது. இனி குடுக்க மாட்டேன். இந்த விஷயம் தெரியாம சாப்பிடுற ஆளுகளுக்கு தான் பில்லு கொடுப்போம் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அந்தப் பெரியவர்.

பெரியவரின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு தொண்டை விக்கி கண்கள் இரண்டும் வெளியே பிதுங்குவது போல் இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *