கோபி, ஜூலை 3–
கோபிசெட்டிப்பாளையம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ 1,61,000 பணம், 22 இருசக்கர வாகனங்கள், சேவல்கள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூர் நல்லாம்பட்டி அருகே மாணவுக்காட்டு புதூரை சேர்ந்த காரத்திகேயன் என்பவரது விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக திங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
24 பேர் கைது
அதை தொடர்ந்து கவுந்தப்பாடி ஆய்வாளர் சுபாஸ் தலைமையில் மாணுவக்காட்டு புதூரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து மெகா சேவல் சூதாட்டம் நடைபெறுவது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட உரிமையாளர் கார்த்திகேயன் உட்பட 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் பணம், 24 ஜோடி சண்டை சேவல்கள், 22 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.