செய்திகள்

சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்ட நிலம் ஆர்ஜித நடவடிக்கை : 2 வாரத்துக்கு நிறுத்தி வைப்பு

சென்னை, செப்.14-

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் வழித்தடத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நில ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வக்கீல் திட்டத்தை இறுதி செய்யும் வரை நில ஆர்ஜித நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் சென்னை சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

2 பேர் கைது; 3 பேர் தலைமறைவு

இதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து கரூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்யவும், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *