செய்திகள் வாழ்வியல்

சேலம் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில்

*அன்னையை வணங்குவோருக்கு திருமணம் கூடி வரும்

*குழந்தை வேண்டுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும்

அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோவில், ஆத்தூர், சேலம் மாவட்டம்

இந்த திருத்தலம் மிகவும் பழமையானது. இது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் உள்ளது. கிழக்கு நோக்கி உள்ள ஐந்து நிலை ராஜ கோபுரம் மிடுக்குடன் காட்சி தருகிறது. இந்த கோவிலின் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் இருப்பதை அபிஷேகம் முடிந்து தீப ஆராதனை காட்டும் பொழுது, அந்தத் தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து லிங்கத்தின் மீது ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். இந்த எம்பெருமானை வணங்குவோர் வாழ்வு இருள்நீங்கி ஒளிவிட்டு பிரகாசிக்கும் என்ற தத்துவத்தை விளக்குவதாக உள்ளது என்கின்றனர். அந்த ஒளி அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக ஐதீகம். இந்த அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளது. அவ்வளவு அழகாக அமைந்துள்ளது. கருணை உள்ளத்தோடு காட்சி அளிப்பது தத்ரூபமாக இருப்பதால் இந்த அன்னையை வணங்குவோருக்கு திருமணம் கூடி வரும் என்றும் குழந்தை வேண்டுவோருக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் உறுதியாக கூறுகின்றனர்.

இந்தத் தலத்தினுடைய புராண வரலாறு பற்றி கூறுவதாவது:–

வசிஷ்ட மஹ ரிஷி ராம பிரானின் குலகுரு. அவர் இந்தத் தலம் வந்து நிம்மதியாக தவத்தில் ஆழ்ந்தார். ஆனால் தவம் அடிக்கடி தடை பெறவே, நாரத முனிவரிடம் யோசனை கேட்டார். அவர் நீரையும் பூவையும் வைத்து சிவ பெருமானை பூஜித்தால் இந்தத் தடங்கல் நீங்கி விடும் என்றார்.

வசிஷ்ட மகரிஷி அவருடைய தவ வலிமையால் வசிஷ்ட நதி என்ற தீர்த்தத்தை உருவாக்கினார்.

பின்னர் பூஜைக்கு தகுந்த இடம் எது என்று தேடுகையில் ஒரு மேடான பகுதியில் அவரது கால் இடறியது. அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மெய் சிலிர்த்து போய் அந்த இடத்தில் அமர்ந்து பூஜையை ஆரம்பித்தார். அப்பொழுது தன் கால்பட்டதால் லிங்கத்தின் ஒருபகுதி சேதம் அடைந்திருப்து கண்டு, மனம் கலங்கி சேதம் அடைந்த லிங்கத்தை வழிபாட்டிற்கு ஏற்றுக் கொள்ளலாமா என தயங்கினார்.

அப்பொழுது ஒரு அசரீரி வாக்கு காதில் விழுந்தது. நீர் தயங்காமல் பூஜை செய்வீராக! என்று அசரீரி கேட்டது. அதே போன்று, ஆராதனை பூஜைகள் முடிந்து, லிங்கத்திற்கு வசிஷ்ட முனிவர் தீப ஆராதனை செய்தார். அப்பொழுது ஜோதி சொரூபமாய் ஒளி தோன்றியது. அந்த ஒளி சிவலிங்கத்தின் திருமேனியில் பட்டுப் பேரொளியாய் மாறியது. அது சமயம் சிவலிங்கத்தின் குறை நீங்கி, ஜோதி வடிவமாக பிரகாசமாய் மாறியது. அந்த ஜோதி ஒளியே, தவத்திற்கு இடையூறு செய்த அசுர சக்திகளை அறுத்து எறிந்தது. வசிஷ்ட முனிவரும் சிவ பெருமானை இந்த தலத்திலேயே அருள்பாலித்து, இங்கு அவரை நாடி வரும் பக்தர்களை அனுகிரகிக்க வேண்டியதின் பெயரில் இங்கு காயநிர்மலேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

காயம் என்பது உடல், நிர்மலம் என்றால் குறை இல்லாதது என்று பொருள். குறை ஏதும் இல்லாத முழு உருவாக ஒளி வடிவமாக காட்சி தருகிறார். இன்றும் தீப ஆராதனைகளின் போது, தீப ஒளி கண்ணாடி போன்று லிங்கத் திருமேனியில் பிரதிபலிப்பதை காணலாம். எனவே இத்தலத்தை அக்னி தலம் என்கின்றனர்.

பின்னர் இந்த இடம் பல மன்னர்களின் ஆளுகையில் வந்த பொழுது, சீர்திருத்தம் செய்து இன்று மிகக் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த கோவில்.

கருவறையைச் சுற்றி உள்ள பிரகாரத்தில், விநாயகர்கள் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடனும் சிவ பார்வதி, பாலமுருகன், வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான், லட்சுமிதேவி, சரஸ்வதி தேவி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, ஐயப்பன், சூரிய பகவான், சனி பகவான், வரம் அருளும் வடிவில் அனுமன் ஆகிய அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு முக்கிய விழாக்களாக பிரதோஷம், சிவராத்திரி, சோமவார பூஜைகள், மற்ற அனைத்து விஷேச நாட்களிலும் தமிழ், ஆங்கில புத்தாண்டுகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. 2 கால பூஜைகள் தினமும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்து உள்ளது.

இது சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பஸ்நிலையம் அருகில் உள்ளது. இதனுடைய நிர்வாக அதிகாரி திருசங்கர் அவர்களுடைய தலைமையில் சீராக நிர்வகிக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மன்னுக தில்லை வளர்க நம்

பக்தர்கள் வஞ்சகர் போய் அகல

பொன்னின் செய் மண்டபத்துள்ளே

புகுந்து பவனியெல்லாம் விளங்க

அன்ன நடைமடவான் உமைகோன்

அடியோருக்கு அருள்புரிந்து

பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த

பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

––பஞ்சபுராணம்

அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோவில், ஆத்தூர், சேலம் மாவட்டம். தொலைபேசி எண் : 944281149

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *