செய்திகள்

சேலத்தில் 21–ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம்

சென்னையில் உதயநிதி துவக்கினார்

சென்னை, ஜன. 18-

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற 21ந் தேதி நடைபெறுகிறது. மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் இந்த மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி மாநில இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மலர் தூவி வணங்கிவிட்டு சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் அருகில் மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். தீப சுடரை அமைச்சர் உதயநிதி எடுத்து கூடியிருந்த நிர்வாகிகள் மத்தியில் காண்பித்தபடியே துணைச் செயலாளர் ஜோயலிடம் வழங்கினார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20–ந்தேதி அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடையும். இந்த மாநாட்டு சுடரை அமைச்சர் உதயநிதி பெற்றுக்கொண்டு கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.

மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மாநாட்டுச் சுடரை ஏந்திச் செல்கின்றனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

நான் இளைஞரணி செயலாளராக 2019ம் ஆண்டு பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை இளைஞரணி உறுப்பினராக சேர்த்தோம். அதே போல் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம்.

அதே போல் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி முடித்தோம்.இப்போது இல்லம் தோறும் இளைஞரணி நிகழ்ச்சி நடத்தி வீடு வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தோம். எல்லாவற்றையும் விட மிக முக்கிய பணியாக 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு பெயரே, மாநில உரிமைகள் மீட்பு மாநாடு கடந்த 9 வருடமாக நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையும் இழந்திருக்கிறோம்.

சேலம் மாநாட்டை இதுவரை இந்திய வரலாற்றில் இப்படி ஒரு சிறப்பான எழுச்சியான மாநாடு நடந்ததில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தி காட்டுவோம். நீங்கள் அத்தனை பேரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும்.

சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

20-ந் தேதி மாலை முதலமைச்சர் மாநாட்டு திடலுக்கு வருகிறார்.தமிழ்நாடு முழுவதும் இளைஞரணி மாநாட்டை விளக்கி சொல்வதற்காக 500 மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. அவர்கள் அத்தனை பேரையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளார். 21ந் தேதி காலை 8.30 மணியளவில் மாநாடு துவங்க உள்ளது. கழக கொடியை துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்றி வைக்கிறார். மாநாட்டில் 21 பேச்சாளர்கள் பேசுகிறார்கள். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இளைஞரணி புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். 2024 தேர்தலில் எப்படி இளைஞரணி மிக மிக முக்கியமாக இருந்ததோ அதே போல் இப்போதும் இருக்கும். தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கும் இளைஞரணி தான் முன்களத்தில் நின்று பாடுபடும். இவ்வாறு உதயநிதி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின் போது அதை தி.மு.க. தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே ஜனாதிபதியை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன். ராமர் கோவில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ தி.மு.க. எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் அதில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *