செய்திகள்

சேலத்தில் ‘வாக்கிங்’ சென்றபோது ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்

மக்கள் ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்தனர்

சேலம், மார்ச் 30–

சேலத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து நடைப்பயிற்சியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

ஆங்காங்கே பிரச்சாரம் செய்யும் போது காலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அப்போது வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டுகிறார். அதன்படி சேலத்தில் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவர், தஞ்சாவூா், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து, தருமபுரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தை முடித்துக் கொண்டு, இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலின், மாமாங்கம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கினார்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை சேலம் அக்ரகாரம், சின்னகடைவீதி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த மக்களிடமும், சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மார்க்கெட் பகுதியில்…

பின்னர், மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கிருந்த மக்களோடு உரையாடியதோடு சாலையோர கடைகளில் தேநீர் அருந்தினார். நடைப்பயிற்சியின் போது சாலையில் இருந்த வியாபாரிகள் மற்றும் மக்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

மேலும் மக்களின் குறைகளையும் அவர் செவிமடுத்து பொறுமையாக கேட்டுச் சென்றார்.

சேலம் சின்ன கடை வீதி ராஜகணபதி கோயில் இரண்டாவது அக்ரகாரம் வழியாகச் சென்று தனது நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, சேலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து மாலை 6 மணியளவில் சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

பிரச்சாரத்திற்காக சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *