போஸ்டர் செய்தி

சேலத்தில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று ஓட்டு கேட்டார் எடப்பாடி பழனிசாமி

சேலம், ஏப்.16–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் கொளுத்தும் வெயிலில் வீதிவீதியாக நடந்து சென்று அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

கடைகளுக்கு சென்று கடைக்காரர் மற்றும் அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து ஓட்டு கேட்டார்.

அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆதரவு தெரிவித்தார்கள்.

முதலமைச்சருடன் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். மிகுந்த உற்சாகத்துடன் எழுச்சியுடன் கோஷம் எழுப்பி சேலம் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்கள்.

கடந்த 22–ந்தேதி அன்று தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 8500 கி.மீ.க்கு மேல் சுற்றுப்பயணம் செய்து அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். 400க்கு மேற்பட்ட இடங்களில் அவர் மக்கள் மத்தியில் பேசி ஆதரவு திரட்டினார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். எல்லா இடங்களிலும் உற்சாகம் எழுச்சி கரை புரண்டது. நாளுக்கு நாள் அண்ணா தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்து வந்தது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் நின்ற படியும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஏற்கனவே சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்த சேலம் பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந் தேதி கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்திலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்றபடியே சேலம் பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

சின்னக்கடை வீதியில் ஓட்டு சேகரித்தார். ஒவ்வொரு கடையாக சென்று அங்கிருந்த கடைக்காரர் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து ஆதரவு கேட்டார். அப்போது அங்கிருந்த பூக்கடையில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பூ மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர். கடை தெருவில் நின்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கைக்குலுக்கி உற்சாகமாக வரவேற்றார்கள்.

அதனை தொடர்ந்து அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்தார்.

பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ்டாப்பில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *