செய்திகள்

‘சேரி என்றால் அன்பு;’ சர்ச்சை பதிவு: நடிகை குஷ்பூ விளக்கம்

சென்னை,

‘சேரி என்றால் அன்பு’ என்று கூறி தனது சர்ச்சை பதிவுக்கு நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு புகழ் பெற்ற குஷ்பூ நடிப்பது மட்டுமல்லாமல் பா.ஜ.க கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு நடிகை குஷ்பூ பதிலளித்திருந்தார். அதில் அவர், ‘திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது.

ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பார்க்க நான் பரிந்துரைக்கிறேன். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டிருந்தார். குஷ்பூ தனது பதிவில், ‘சேரி மொழி’ என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு ‘சேரி மொழி’ என முத்திரை குத்துகிறார் குஷ்பூ, குஷ்பூ தனது வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்தன. பொது இடத்தில் குஷ்பூ மன்னிப்புக் கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குஷ்பு விளக்கம்

சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புதிய அதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனது பதிவிற்கு குறிப்பிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. படித்த படிப்பறிவில்லாதவர்களுக்கு இது பற்றி கொஞ்சம் சொல்லித்தர விரும்புகிறேன். ‘சேரி’ என்பது பிரஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்படும் ஒரு வார்த்தை.

நான் அதை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தேன். குண்டர்கள் கட்சியில் என்னை கேலி செய்யும் நபர்களிடம் நான் அன்பைப் பகிர்கிறேன் என்பதற்காக அந்த வார்த்தையை குறிப்பிட்டேன். என் அம்மாவால் எனக்குள் விதைக்கப்பட்ட மதிப்புகள் குறித்து நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னிருப்பேன். 2 நிமிட புகழைப் பெற நீங்கள் எப்போதும் ஒரு விஷயத்தை பின்தொடர்பவர்களாக இருப்பீர்கள் மேலும் எனது தனிப்பட்ட எதிர்வினையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். மன்னிக்கவும் நண்பர்களே, நீங்கள் அதற்கு தகுதியானவர் அல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *