சென்னை, மார்ச் 21–
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி நாளை மற்றும் 26–ந் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதேபோல், 26-ம் தேதி சென்னை அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிகளை முன்னிட்டு, போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பகுதியில் நாளை மற்றும் 26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை 5 முதல் இரவு 11 மணிவரையில் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும்.
கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் வாகனங்கள் எளிதாக வரும் வகையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு), பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜாசாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்களுக்கும் வாகன நிறுத்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.