செய்திகள்

சேட்டிலைட் தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய துறையூர் அரசு பள்ளி மாணவி

துறையூர், பிப். 11–

ராமேஸ்வரத்தில் கடந்த 7–ம் தேதி நடைபெற்ற, அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த சேட்டிலைட் விண்ணில் ஏவும் நிகழ்ச்சியில், துறையூர் அரசுப் பள்ளி மாணவி பங்குபற்று உலகிலேயே மிகவும் எடை குறைந்த சேட்டிலைட் தயாரித்து விண்ணில் அனுப்பி சாதனை புரிந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த பச்சபெருமாள்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வரும் மாணவி அகல்யா. இவர் அறிவியல் பற்றிய பயிற்சி வகுப்பில் தேர்வு பெற்று, இவருக்கு ஒரு வாரம் செயற்கைக்கோள் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் செயற்கைக்கோள் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பவுண்டேசன் நடத்திய , இந்தியா முழுவதிலும் உள்ள 100 அரசுப் பள்ளி மாணவர்கள், சேட்டிலைட் தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அகல்யா மற்றும் 100 மாணவர்கள் பங்கேற்று உலகிலேயே மிகவும் எடை குறைந்த 12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட 100 செயற்கைக்கோள்கள் தயாரித்தனர். அதனை 2 ஹீலியம் பலூன்கள் மூலம் விண்ணில் செலுத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயம், வானிலை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 தகவல்களை விண்ணிலிருந்து பூமிக்கு அனுப்பும் உலகிலேயே மிக எடை குறைந்த சேட்டிலைட் தயாரித்த 100 மாணவர்களில் ஒருவராக கலந்து கொண்டு திரும்பிய, பச்ச பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவி அகல்யா வை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்களும் அவரது பெற்றோரும் பாராட்டி மகிழ்ந்தனர். மேலும் இதே அரசு பள்ளியில் அகல்யாவின் மூத்த சகோதரி ஆர்த்தி நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்து மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *