வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்
புடாபெஸ்ட், செப். 17–
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில் ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார். ஹரிகா, வைஷாலி,தானியா தங்களது ஆட்டங்களில் ‘டிரா’ கண்டனர்.
முடிவில் இந்தியா 2½-–1½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவை வீழ்த்தி தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி, ஹங்கேரியை சந்தித்தது. இதில் கருப்புநிற காய்களுடன் ஆடிய தமிழக வீரர் குகேஷ், ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ராப்போர்ட் ரிச்சர்ட்டுடன் 44-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா பீட்டர் லெகோவுடன் டிரா செய்தார். மற்ற மூன்று இந்திய வீரர்களின் ஆட்டமும் நீண்ட நேரம் நீடித்தது. இறுதியில் இந்திய அணி 3-–1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.
முதல் 5 இடங்களில்
2 இந்திய வீரர்கள்
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.தேல் இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர். குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.